×

நெல்லை தொகுதியில் தோற்றால் பதவி பறிக்கப்படும்: திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

சென்னை: நெல்லை தொகுதியில் தோற்றால் திமுக நிர்வாகிகளின் பதவி பறிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் திமுக தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றது. அதன்படி, பிரசாரம், பொதுக்கூட்டம், நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை திமுக மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக, நிர்வாகிகளை சந்திக்கும் விதமாகவும், தொகுதியில் கட்சி செயல்பாடுகள், வெற்றி வாய்ப்பு, அதற்கு மாவட்ட நிர்வாகிகள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பது குறித்து ஒவ்வொரு நிர்வாகியையும் நேரடியாக சந்தித்து பேசக்கூடிய வகையில் தான் உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகளுடன் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘ஒன்-டூ-ஒன்’ சந்திக்கும் உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில் இன்று சங்கரன்கோவில், நெல்லை தொகுதி திமுக நிர்வாகிகளை சந்தித்தார். அதில் தெற்கு மண்டல பொறுப்பாளர் கனிமொழி எம்.பி.யும் பங்கேற்றிருந்தார்.

இந்த ஆலோசனையின்போது தொகுதியில் கட்சி செயல்பாடுகள், கள நிலவரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்நிலையில் நெல்லை தொகுதியில் வெற்றி பெறவில்லையென்றால் பதவிகள் பறிக்கப்படும் என்று மாவட்டச் செயலாளர் உட்பட அனைத்து நிர்வாகிகளுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags : Nella ,Chief Minister MLA ,K. Stalin ,Chennai ,Chief Minister ,MLA ,Dimuka ,Tamil Nadu ,2026 Assembly elections ,
× RELATED எல்லை விரிவாக்க திட்டத்தில் ராஜிவ்...