×

பளுதூக்குதல் விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர் மஹாராஜனுக்கு ரூ.25 லட்சம் பரிசுத்தொகை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: பஹ்ரைனில் நடைபெற்ற 3வது ஆசிய இளையோர் பளுதூக்குதல் விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர் மஹாராஜனுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ரூ.25 லட்சம் பரிசுத்தொகை வழங்கி பாராட்டு தெரிவித்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பஹ்ரைனில் சமீபத்தில் நடைபெற்ற 3வது ஆசிய இளையோர் விளையாட்டு பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர் அ.மஹாராஜனுக்கு ரூ.25 லட்சத்துக்கான ஊக்கத்தொகை காசோலையை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

மேலும் அபுதாபியில் 21.11.2025 முதல் 30.11.2025 வரை நடைபெறும் உலக சீனியர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் 11 வீரர், வீராங்கனைகளுக்கு போட்டியில் பங்கேற்க, பயணச்செலவு, தங்குமிட செலவு உள்ளிட்ட செலவீனத்திற்காக தலா ரூ.1,75,000 வீதம் மொத்தம் ரூ.19.25 லட்சத்துக்கான காசேலைகளை வழங்கினார்.

தொடர்ந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியை சேர்ந்த 5 கூடைப்பந்து வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வாங்கிட மொத்தம் ரூ.2.75 லட்சத்துக்கான காசோலைகளையும், உலக திறன் விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் பாரா வாள்வீச்சு வீராங்கனை ஷெரந்தி தாமஸ்க்கு செலவீன தொகையாக 1,64,500 ரூபாய்கான காசோலையும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து வழங்கினார்.

தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளையின் மூலமாக இதுவரை 481 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் உட்பட 4,082 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளவும், உயர்தர விளையாட்டு உபகரணங்கள் வாங்கிடவும் ரூ.36 கோடியே 58 ஆயிரத்து 551 நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணைத்தலைவர் அசோக் சிகாமணி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Tamil Nadu ,Maharajan ,Chennai ,3rd Asian Youth Weightlifting Competition ,Bahrain ,
× RELATED முல்லை பெரியாறு அணையில் மதகுகளை இயக்கி துணைக்குழு ஆய்வு