மஞ்சேரி: பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தாய்க்கும் அவரது காதலனுக்கும் தலா 180 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கேரள மாநிலம் மஞ்சேரி பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி, தனது தாய் மற்றும் அவரது ஆண் நண்பரால் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பெற்ற தாயே தனது காதலனுடன் சேர்ந்து இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுமியின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்ட அக்கம்பக்கத்தினர் எழுப்பிய சந்தேகத்தின் பேரில், குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தலையிட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தாய் மற்றும் அவரது காதலன் இருவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டது. மேலும், சிறுமியை மிரட்டி உண்மையை வெளியே சொல்ல விடாமல் தடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, தாய் மற்றும் அவரது காதலன் மீது போக்சோ சட்டம் மற்றும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மஞ்சேரி சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று (நவ. 4) தீர்ப்பளித்த நீதிபதி ஏ.எம். அஷ்ரப், குற்றம்சாட்டப்பட்ட தாய் மற்றும் அவரது காதலன் ஆகிய இருவருக்கும் தலா 180 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டார்.
பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த தண்டனை வழங்கப்பட்டாலும், இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறைத் தண்டனையுடன், இருவருக்கும் கணிசமான அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த அபராதத் தொகையை, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. பெற்ற தாயே தனது மகளுக்கு எதிராக இழைத்த இந்த கொடூர குற்றத்தில் உடந்தையாக இருந்ததால், வழங்கப்பட்டுள்ள இந்த கடுமையான தண்டனை நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
