மும்பை: அதிக வட்டி தருவதாகக் கூறி முதியவர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில், முன்னாள் நடிகையும் ஆடை வடிவமைப்பாளருமான மசுமி மேவாவாலா தனது குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த முன்னாள் நடிகையும், பிரபல ஆடை வடிவமைப்பாளருமான மசுமி மேவாவாலா (33), அவரது தந்தை ராஜேஷ் மேவாவாலா (55) மற்றும் சகோதரன் பார்கவ் (23) ஆகியோர் மீது அடுக்கடுக்கான பணமோசடி புகார்கள் எழுந்துள்ளன. இவர்கள் முதியவர்களைக் குறிவைத்து, குறிப்பிட்ட தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி பணத்தை வசூலித்துள்ளனர்.
குறிப்பாக அறுவை சிகிச்சை மற்றும் வணிக முதலீடுகள் எனக் காரணம் காட்டிப் பலரிடம் பணம் பெற்றுத் திரும்பத் தராமல் ஏமாற்றியதாகவும், ஏற்கனவே 2023ல் இதேபோன்ற வழக்கில் ஜாமீனில் வெளிவந்த ராஜேஷ் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், 60 வயதுடைய பெண் ஒருவரிடம் ரூ.1.17 கோடி மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர் பெயரிலேயே வங்கிக் கடன் வாங்கியது அம்பலமானது. இதையடுத்து லோயர் பரேல் பகுதியில் உள்ள வீட்டில் பதுங்கியிருந்த மசுமி மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். இவர் மீது தற்போது வரை 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ‘மோசடி செய்யப்பட்ட பணம் எங்கு மாற்றப்பட்டுள்ளது’ என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
