×

கும்பகோணத்தில் மாணவர்கள் தாக்கியதில் மூளைச்சாவு அடைந்த பிளஸ் 2 மாணவன் பலி: 15 பேர் மீது கொலை வழக்கு பதிவு

 

கும்பகோணம்: கும்பகோணத்தில் சக மாணவர்கள் தாக்கியதில் மூளைச்சாவு அடைந்த பிளஸ் 2 மாணவன் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார், 15 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரத்தில் உள்ள அரசு அறிஞர் அண்ணா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்த திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் இனாம்கிளியூரை சேர்ந்த மாணவன் கவியரசனை(17), 11ம் வகுப்பு மாணவர்கள் 15 பேர் மரக்கட்டையால் தாக்கியதில் மண்டை உடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மாணவனின் தாய் ராஜலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் கும்பகோணம் தாலுகா போலீசார், கொலை முயற்சி வழக்கு பதிந்து 11ம் வகுப்பு மாணவர்கள் 15 பேரை கைது செய்து தஞ்சாவூர் சிறார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 2 மணியளவில் கவியரசன் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார், மாணவர்கள் 15 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உறவினர்கள் போராட்டம்: மாணவர் கவியரசன் உடல் பிரேத பரிசோதனை முடிந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்து. மாணவனின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், அவரது சகோதரருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை கவியரசன் உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி நேற்று காலை 10 மணியளவில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வாசலில் குடும்பத்தினர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் 10.35 மணியளவில் கவியரசன் உடலை குடும்பத்தினர் வாங்கி சென்றனர்.

Tags : Kumbakonam ,Patteswaram ,Thanjavur ,
× RELATED முதியவர்களிடம் கோடிக்கணக்கில் பண...