×

தமிழக அரசின் புதிய மினி பஸ் திட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!!

சென்னை : தமிழக அரசின் புதிய மினி பஸ் திட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. தமிழகத்தில் போக்குவரத்து வசதியில்லாத கிராமப்புறங்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில், புதிய மினி பஸ் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக 2025 ஏப்ரலில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து தனியார் பஸ் ஆப்ரேட்டர்கள் சார்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி புதிய மினி பஸ் திட்டத்தால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனக் கூறி, வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பஸ் ஆப்ரேட்டர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் ஹேமன்சந்தன் கவுடா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் மினி பஸ் திட்டத்தால் தங்கள் தொழில் பாதிப்படையும் என தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே இந்த திட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டு, 1,350 பேருந்துகள் உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும், 500 விண்ணப்பங்கள் பரிசீலினையில் உள்ளதாகவும், விரைவில் அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்தனர். அதேசமயம், பேருந்துகளுக்கு உரிமம் வழங்கியது என்பது, இந்த மேல் முறையீட்டு வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனக் கூறி, விசாரணையை ஜனவரி மூன்றாவது வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.

Tags : Chennai High Court ,Tamil Government ,Chennai ,Government of Tamil Nadu ,Tamil Nadu ,
× RELATED வெப்பநிலை குறைந்தது தமிழ்நாட்டில்...