×

மிருகண்டா அணையில் தண்ணீர் திறப்பு

கலசபாக்கம், ஜன.1: பாசன தேவைக்காக கலசபாக்கம் அடுத்த மிருகண்டா அணையில் இருந்து தண்ணீரை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார். கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் கிராமத்தில் உள்ள மிருகண்டா அணை சமீபத்தில் பெய்த மழை காரணமாக 20 அடிக்கு நிரம்பியது. இந்நிலையில், விவசாய பாசனத்திற்காக அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். எம்எல்ஏ தூசி கே.மோகன் முன்னிலை வகித்தார்.

அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்து கூறுகையில், `இன்று (நேற்று) முதல் வரும் 7ம் தேதி வரை ஒரு வாரத்திற்கு விவசாய பாசனத்திற்காக வினாடிக்கு 94 கன அடி தண்ணீர் அணையில் இருந்து திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் 17 ஏரிகளுக்கு நீர்வரத்து கிடைக்கும். 3,190.96 ஏக்கர் பரப்பளவிற்கு பாசன வசதி பெறும்.

மேலும், 40 லட்சம் மதிப்பில் உயர்மட்ட பாலம், 45 லட்சம் மதிப்பில் மேல்சோழங்குப்பம் கிராமத்தில் இருந்து மிருகண்டா அணைக்கு செல்லும் சாலை சீரமைக்கும் பணி ஒரு வாரத்திற்குள் தொடங்கப்பட உள்ளது'''' என்றார். அப்போது, செயற்பொறியாளர் மகேந்திரன், உதவி செயற்பொறியாளர்கள் வடிவேல், அறிவழகன், உதவி பொறியாளர் சிவக்குமார், பிடிஓ விஜயலட்சுமி, அதிமுக கலை பிரிவு மாவட்ட செயலாளர் துரை, ஒன்றிய செயலாளர் எம்.திருநாவுக்கரசு, பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags : Water opening ,Mirukanda Dam ,
× RELATED தமிழ்நாட்டுக்கு 22,800 காவிரி நீர்...