சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என கூறப்படும் பகுதியில் குடியிருப்பு வளாக கட்டும் பகுதியில் எந்த பணிகளையும் மேற்கொள்ள கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பன்னடுக்கு குடியிருப்பு வளாகம் கட்ட சிஎம்.டி.ஏ அனுமதி அளித்துள்ளதாக சர்ச்சை எழுந்த நிலையில் பல்வேறு கட்சிகள் இதற்கு கண்டனம் தெரிவித்தன. இதனையடுத்து, சதுப்பு நிலத்தில் கட்டிடம் கட்ட அனுமதி அளிக்கவில்லை எனவும் சதுப்பு நிலத்திற்கு வெளியே தனியார் பட்டா நிலத்தில் அனுமதி அளிக்கப்பட்டதாகவும் அரசு விளக்கமளித்துள்ளது.
இந்நிலையில், பன்னடுக்கு குடியிருப்பு வளாகம் கட்ட அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்த கட்டுமான பணிகளுக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என்றும் கோரியும் அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி ஜெ.பிரஷே்நேவ் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜரானார். தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜரானார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சதுப்பு நிலங்களை பாதுகாப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயமும் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விவரங்கள் தெரியாமல் சிஎம்டிஏ இந்த கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கியது எப்படி?. சதுப்பு நிலத்தின் எல்லையை துல்லியமாக வரையறுக்கும் பணிகள் முடிவடையும் முன் கட்டுமானங்களுக்கும் வளர்ச்சித் திட்டங்களுக்கும் அனுமதி அளித்து வந்தால் ஒட்டுமொத்த சதுப்பு நிலமும் அழிந்துவிடும். இது மிகவும் தீவிரமான விஷயமாகும். இந்த வழக்கு தொடர்பாக நவம்பர் 12ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும். அதுவரை குறிப்பிட்ட பகுதியில் எந்த பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டனர்.
