×

எடப்பாடி அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார்: அமைச்சர் சக்கரபாணி குற்றச்சாட்டு

சென்னை: உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு உண்மையை மறைத்து தவறான தகவலை சொல்லிக் கொண்டிருக்கிறார். சட்டமன்றத்தில் கொள்கை விளக்க குறிப்பு வைக்கப்பட்ட பின்பு அதாவது ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து அந்த நடப்பு கொள்முதல் பருவம் முடிவடையும் நாளான ஆகஸ்ட் 31ம் தேதி வரை கொள்முதல் நடைபெறும். அதற்கான புள்ளி விவரம் அந்த கொள்முதல் குறிப்பில் இடம்பெறாது.இதை புரிந்து கொள்ளாமல் எடப்பாடி பேசி வருகிறார்.

2025-26ம் ஆண்டு 1,892 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 1,59,084 விவசாயிகளிடம் இருந்து 11,77,708 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட தொகை ரூ.2840.25 கோடி. திமுக ஆட்சி காலத்தில் 1.96 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிவரத்தையும் அவர் கொடுக்கப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்புகளையும் நன்றாக பார்த்து இனிமேலாவது இதுபோன்று உண்மைக்கு புறம்பாக சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அதேபோன்று, அன்புமணி வடமாவட்டங்களில் நெல் கொள்முதல் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை விட்டுள்ளார். இது அப்பட்டமான பொய். கடந்த 33 நாட்களில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2,00,17 மெட்ரிக் டன் நெல்லும், திருவள்ளூர் மாவட்டத்தில் 34,314 மெட்ரிக் டன் நெல்லும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழ்நாடு முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தேவையற்ற வகையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தாமல் இருக்க வேண்டும்.

Tags : Edappadi ,Minister ,Chakrabarni ,Chennai ,Ara Chakrabarni ,Opposition Leader ,Edappadi Palaniswami ,Legislative Assembly… ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...