×

60 சதவீதம் தண்ணீர் தேக்கிவைப்பு ரூ.172 கோடி மதிப்பில் மதுராந்தகம் ஏரி சீரமைப்பு

மதுராந்தகம், அக்.31: செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரியை தூர்வாரி சீரமைக்கும் பணிக்காக தமிழ்நாடு அரசு கடந்த 2021ம் ஆண்டு ரூ.120 கோடியை ஒதுக்கீடு செய்தது. இதனைத் தொடர்ந்து அந்தப் பணி தொடங்கப்பட்டு பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் ஏரியை அளவீடு செய்தல், முன் கரை அமைத்தல், பாசன மதகுகள் கட்டமைத்தல் உபரிநீர் போக்கி கட்டமைத்தல், ஏரிக்கரையை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து நடை பெற்று வருகிறது. இந்நிலையில், மதுராந்தகம் ஏரியில் கூடுதலாக நீரை சேமிக்கும் வகையிலும், வெள்ளப் பெருக்கின்போது அதிகளவிலான தண்ணீரை பாதுகாப்பாக வெளியேற்றும் வகையிலும் 144 மீட்டர் நீளத்துக்கு 12 ஷட்டர்களுடன் கூடிய மதகுகள் மற்றும் ஷெட்டர்களை திறந்து மூடுவதற்காக நவீன மோட்டார்கள் அமைக்கும் பணிகள் ரூ.52 கோடி மதிப்பில் நடைபெற்றது.

இந்நிலையில் ஏரியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஏரியில் சுமார் 60 சதவீதம் அளவிற்கு 20 அடி தண்ணீர் தற்போது பெய்த மழையில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் சுந்தர் எம்எல்ஏ, செல்வம் எம்பி ஆகியோர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் சென்று ஏரியின் கட்டுமான பணியை ஆய்வு செய்து, தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரை பார்வையிட்டனர். தொடர்ந்து அப்பகுதி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர். இந்த ஆய்வின்போது நகரச் செயலாளர் குமார், நகர்மன்ற துணைத் தலைவர் சிவலிங்கம், பொதுப்பணித்துறை அதிகாரிகள் தர்மதுரை, பரத் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : Madhurantakam ,Tamil Nadu government ,Madhurantakam lake ,Chengalpattu district ,Public Works Department ,
× RELATED மின் வாரிய அலுவலகம் முன்பு கொட்டப்படும் கட்டிட கழிவுகள்: அகற்ற கோரிக்கை