×

பிரேமா வீடு கட்டுமானப் பணியை முதல்வர் ஆய்வு

சென்னை: நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கடந்த செப்.25ம் தேதி நடந்த ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில், தென்காசி மாவட்டம், கழுநீர்குளத்தைச் சேர்ந்த மாணவி பிரேமா, மழைக்காலங்களில் ஒழுகும் பழைய வீட்டில் தனது பெற்றோருடன் வசித்து வருதாக கண்ணீர் மல்க பேசினார். மாணவி பிரேமா பேசிய 24 மணி நேரத்தில், அவருக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் அரசு வீடு வழங்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன்படி அந்த மாணவியின் தாய் முத்துலெட்சுமி பெயரில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணை அடுத்த நாளே வழங்கப்பட்டது. இந்நிலையில், தென்காசி மாவட்ட அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று தென்காசி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கழுநீர்குளத்திற்கு நேரில் சென்று பிரேமாவின் தாய் முத்துலெட்சுமி, தந்தை ராமசாமி ஆகியோரை சந்தித்து, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் அவர்களது வீட்டின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு, அவர்களுடன் உரையாடினார்.

மேலும், பிரேமாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, ‘உங்கள் வீடு கட்டிக் கொண்டிருக்கும் இடத்தில் இருந்து தான் பேசுகிறேன், இன்னும் 2 மாதங்களில் வீடு கட்டி முடிக்கப்படும்’ என்று முதல்வர் தெரிவித்தார். அதற்கு பிரேமா, முதல்வருக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார்.

* கனவில் கூட பார்க்கவில்லை: பிரேமாவின் தாய் நெகிழ்ச்சி
பிரேமாவின் தாயார் முத்துலட்சுமி கூறுகையில், ‘நாங்கள் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை. தமிழக முதல்வர் எங்கள் வீட்டிற்கு வருவார் என்று. இப்போது கூட என்னால் நம்ப முடியவில்லை. இது ஒரு கனவு போல் உள்ளது. இது போல் நான் ஒரு நாளும் மகிழ்ச்சியாக இருந்ததில்லை. வறுமையில் இருந்ததால் பெண் பிள்ளைகளை ஏன் படிக்க வைக்கிறீர்கள் என அதிகம் பேர் கேட்டனர். ஆனால் எனது கணவர் எந்த குழந்தையாக இருந்தாலும் படிக்க வைத்தால்தான் அவர்களது வாழ்வு சிறக்கும் எனக்கூறி படிக்க வைத்தார். எனது மகள் அரசு பள்ளியில்தான் படித்தார்.

நன்றாக படித்ததால் மாடல் பள்ளியில் படித்து இன்று தனியார் துறையில் நல்ல வேலையில் உள்ளார். எங்களுக்கு இந்த மகிழ்ச்சியும் இந்த பெயரும் பிள்ளைகளைப் படிக்க வைத்ததாலே கிடைத்தது. எனவே பெற்றோர் தங்களது பிள்ளைகளைப் படிக்க வைத்தால் குழந்தைகள் வருங்காலத்தில் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையும் எனக் கூறினார். என் மகளின் வீட்டுக் கனவை நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி’ என்றார்.

* ‘சகோதரி பிரேமாவின் கனவு நனவாகி வருகிறது’
முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் நேற்று வெளியிட்டுள்ள பதிவு: நெடுநாள் கனவாக இருந்து, இப்போது நனவாகிவரும் சகோதரி பிரேமா இல்லத்தின் கட்டுமான பணிகளை பார்வையிட்டேன். கல்வி கொடுத்த உயர்வில் பிறந்துள்ள இந்த மகிழ்ச்சி, இவர்களின் கனவு இல்லத்தில் என்றும் நிறைந்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Chief Minister ,Prema ,Chennai ,Best Tamil Nadu in Education ,Nehru Indoor Stadium ,Kazhuneerkulam, Tenkasi district ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்