×

தமிழ்நாட்டில் கடல்சார் துறையில் முதலீடுகளுக்கு தரமான உள்கட்டமைப்பு, திறமையான மனிதவளம், தொழில் சூழல் உள்ளது: மும்பையில் நடைபெற்ற உலகளாவிய இந்திய கடல்சார் வார விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

சென்னை: தமிழ்நாட்டில் கடல்சார் துறையில் முதலீடுகளுக்கு தரமான உள்கட்டமைப்பு, திறமையான மனிதவளம், நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய தொழில் சூழல் உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு மும்பையில் நடைபெற்ற உலகளாவிய இந்திய கடல்சார் வார விழாவில் கலந்து கொண்டு பேசினார். மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் நடைபெற்ற ‘உலகளாவிய இந்திய கடல்சார் வார விழா – 2025’ நிகழ்வில், தமிழ்நாடு அரசு சார்பில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசியதாவது: 1,069 கிலோ மீட்டர் நீளமான கடற்கரை எல்லையுடன் இந்தியாவின் மிக நீண்ட கடற்கரையை கொண்டுள்ள 2வது மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. தமிழ்நாட்டில், கடல்சார் வர்த்தகத்திற்கு இன்றியமையாதவையாக விளங்கும் 3 முக்கிய பெருந்துறைமுகங்கள் (சென்னை, தூத்துக்குடி மற்றும் எண்ணூர்), 17 சிறுதுறைமுகங்கள், தொழிற் பூங்காக்களும் உள்ளன. அண்டை நாடான இலங்கைக்கு வெகு அருகாமையில் இருப்பதால், சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி, மீன்பிடி துறைமுகங்கள், கடல் உணவு பதப்படுத்துதல், கப்பல் கட்டுதல், பழுதுபார்த்தல், மறுசுழற்சி செய்தல் மற்றும் கடல்சார்ந்த சுற்றுலாத்துறை மேம்பாடு, பன்னாட்டு பயணியர் கப்பல் போக்குவரத்து போன்றவைகளில் தமிழ்நாட்டை ஒரு முக்கிய மையமாக மாற்றியுள்ளன.

தமிழ்நாட்டில் கடல்சார் துறையில் முதலீடுகளுக்கு தரமான உள்கட்டமைப்பு, திறமையான மனிதவளம், நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய தொழில் சூழல் இவற்றை நாம் உறுதிப்படுத்தி வருகிறோம். பல்வேறு உலக நாடுகளில் இருந்து வந்துள்ள முதலீட்டாளர்கள், தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் கடல்சார் சூழ்நிலையை ஆராய்ந்து, இணைந்து பயணிக்க முன்வர வேண்டும். இந்தியாவை உலகின் கடல்சார் மையமாக மாற்றும் மாபெரும் பயணத்தில், தமிழ்நாடு உறுதுணையாக இருந்து, முன்மாதிரியாக செயல்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாட்டின் சார்பாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சென்னை & காமராஜர் துறைமுகத்தின் தலைவர் சுனில் பாலிவால், சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத்துறை செயலாளர் மணிவாசன், தமிழ்நாடு கடல்சார் வாரிய துணை தலைமை செயல் அதிகாரி டி.என்.வெங்கடேஷ், தமிழ்நாடு கைடன்ஸ் மேலாண்மை இயக்குநர்/தலைமை நிர்வாக அதிகாரி தாரேஸ் அஹமது, சென்னை துறைமுக துணைத்தலைவர் எஸ்.விஸ்வநாதன் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags : Tamil Nadu ,Minister ,E.V. Velu ,Global India Maritime Week ,Mumbai ,Chennai ,Maharashtra, Mumbai… ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...