திருப்பூர்: பிரம்மாண்ட வெற்றி, தோல்விகளை சந்தித்தாலும் உழைப்பை நிறுத்தாத தலைவர் கலைஞர் என்று திருப்பூரில் நடைபெற்ற விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டினார். துணை ஜனாதிபதிசி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று திருப்பூர் தொழில் துறை மற்றும் அரசியல் கட்சியினர் நடத்திய பாராட்டு விழாவில் கலந்து கொண்டார். இதில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் என அனைத்து கட்சியினரிடம் இணைந்து பணியாற்றிய காரணத்தினால் என்னவோ இறைவன் என்னை கட்சி அரசியல் பணியிலிருந்து விலக்கி வைத்து விட்டதாக கருதுகிறேன். அரசியலில் மாற்று கட்சி தலைவர்களை விமர்சனம் செய்கின்றோம். ஆனால் அவர்களிடமிருந்து நல்லதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
நான் சார்ந்திருந்த இயக்கம் திமுகவிற்கு மிக எதிரானது என எல்லாருக்கும் தெரிந்தது தான். ஆனால், கலைஞரிடத்தில் ஒரு குணம் எனக்கு பிடித்திருந்தது. எந்த நேரத்திலும் உழைப்பை நிறுத்தாத தலைவர். தமிழகத்தில் பிரம்மாண்ட வெற்றியும் தோல்வியையும் சந்தித்த தலைவர் கலைஞர். இருப்பினும் தன்னுடைய உழைப்பை என்றும் நிறுத்தாதவர். அவர் தோல்வியடையும் போது மறுநாள் முரசொலி நாளிதழை படிக்கும் போது தம்பி வீறு கொண்டு எழுந்து வா, தமிழினத்தின் எதிர்காலத்தை கட்டி காக்கின்ற பொறுப்பு உனக்கு மட்டும் தான் இருக்கிறது என அதே கம்பீரத்தோடு எழுதி இருப்பார். தோல்வியை கண்டு துவண்டு விடாமல் கடுமையாக உழைத்தார்.
சாய ஆலை பிரச்னைகள் வந்தபோது முன்னாள் முதல்வர் கலைஞர் சாய சுத்தகரிப்பு நிலையங்களை தொடங்கி வைத்தார். தான் சார்ந்திருந்த இயக்கத்தின் மாற்று சிந்தனையுள்ள நல்லகண்ணுவை நான் தோற்கடித்த போது மிகவும் வருத்தத்திற்கு உள்ளானேன். காரணம் அரசியல், பொது வாழ்க்கை என்பது பிறர் நலனுக்காக வாழ்வது என்பதை நிரூபித்து வாழ்ந்து காட்டியவர் நல்லகண்ணு. அதேபோல் நிர்வாக திறன் மிகுந்த தலைவர் ஜெயலலிதா, நாட்டிற்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய். யார் எதை சொன்னாலும் கேட்டுக்கொண்டு அதில் உள்ள நல்லவைகளை எடுத்து சிந்தித்து செயல்படுபவர் பிரதமர் நரேந்திர மோடி. இவ்வாறு அவர் பேசினார்.
* மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம்
திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தனி விமானம் மூலம் நேற்று மாலை மதுரை வந்தார். விமான நிலையத்தில் அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர். வரவேற்பை முடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிய துணை ஜனாதிபதி, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றார். கிழக்கு கோபுர வாசலில் பூரண கும்ப மரியாதையுடன், மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சுவாமி, அம்மனை தரிசனம் செய்தார்.
சுமார் ஒரு மணி நேரம் சாமி தரிசனம் செய்த பின்னர் கோயிலில் இருந்து புறப்பட்டார். அப்போது மதுரை தெற்கு ஆவணி மூலவீதி பகுதியில் உள்ள மதுரை ஆதினம் மடம் அருகே அவரை காண நின்றிருந்த பொதுமக்களை சந்தித்தார். சுமார் 500 மீட்டர் தூரம் காரை விட்டு இறங்கி நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார்.
