வேலூர் : வேலூர் மாநகராட்சி பகுதிகளில் தேங்கி நிற்கும் வெள்ளத்தில் நடந்து சென்று ஆய்வு செய்த கலெக்டர் சுப்புலட்சுமி, கால்வாய் தடுப்பு சுவர்களை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.வடகிழக்கு பருவமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வேலூர் மாநகரில் பெய்த மழைக்காரணமாக பல்வேறு இடங்களில் குடியிருப்புகள் மற்றும் சாலைகள், தெருக்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது.
இதனால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். வேலூர் மாநகராட்சி பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட கன்சால்பேட்டை வீரஆஞ்சநேயர் கோயில் தெருவில், தேங்கியுள்ள மழைநீரில் நடந்து சென்று கலெக்டர் சுப்புலட்சுமி ஆய்வு செய்தார். அப்போது, அங்கு வசிக்கும் மக்களிடம் மழைநீர் சூழ்ந்துள்ளதால், அருகே உள்ள முகாம்களில் தங்குமாறு அழைப்பு விடுத்தார்.
மேலும், அப்பகுதியில் மழைநீரை வெளியேற்றும் பணிகளையும் ஆய்வு செய்தார். அப்போது நிக்கல்சன் கால்வாய் ஆக்கிரமிப்பு பகுதிகளையும் ஆய்வு செய்தார். இதையடுத்து, இந்திரா நகரில் கலெக்டர் சுப்புலட்சுமி ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மேயர் சுஜாதா, கமிஷனர் லட்சுமணன், மாநகர நல அலுவலர் பிரதாப், தாசில்தார் வடிவேலு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.
பின்னர் கலெக்டர் சுப்புலட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது: நிக்கல்சன் கால்வாயில் இருந்து மழைநீர் வெளியேறாத வண்ணம் 599 மணல் மூட்டைகளை தயார் செய்து வைத்துள்ளோம். கன்சால்பேட்டை பகுதியை சேர்ந்த 176 மக்கள் 2 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீதம் இருப்பவர்களையும் முகாமிற்கு வரவழைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒரு சிலருக்கு காய்ச்சல் அறிகுறி தொண்டை வலி இருப்பதாக தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறோம். மழைநீர் தேங்கி உள்ள இடங்களில் பிளீச்சிங் பவுடர் போடுவது, கொசு மருந்து அடிப்பது உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காட்பாடியை பொறுத்தவரை வண்டறந்தாங்கல், கழிஞ்சூர், தாராபடவேடு ஆகிய ஏரிகள் நிரம்பியதால் அங்குள்ள பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
அதனை வெளியேற்ற விஜி ராவ் நகர் கால்வாய் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 17ம் தேதியிலிருந்து தொடர்ந்து 5 நாட்கள் மழை பெய்து வரும் நிலையில் அதிகபட்சமாக வேலூர், காட்பாடியில் 71 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
வேலூர் மாநகரின் முக்கிய கால்வாய்களான நிக்கல்சன் கால்வாய் மற்றும் காட்பாடியில் கழிஞ்சூர் பகுதிகள் தான் அதிகம் பாதிக்கும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு வடகிழக்கு பருவமழைக்கு பின்பு தான் பாதிப்பு அதிகமாகியுள்ளது. நிக்கல்சன் கால்வாயில் 3 இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றி அதன் தடுப்பு சுவர்களை உயர்த்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
