×

2026 உலகக் கோப்பை கால்பந்தில் ஆட விருப்பம்: நாட்டுக்காக ஆடுவது வாழ்நாள் கனவு: கண்கள் விரிய விவரித்த மெஸ்ஸி

 

நியூயார்க்: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து 2022 இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா அணி 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்த போட்டிகளில் இதுவரை, பிரேசில் அதிகபட்சமாக 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்நிலையில், அர்ஜென்டினா அணிக்கு கோப்பையை வென்று தந்த அந்த அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி (38) அடுத்தாண்டில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியிலும் ஆட ஆர்வமுடன் இருப்பதாக கூறியுள்ளார். 2026ல் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய வட அமெரிக்க நாடுகளில் நடைபெற உள்ளன.

அடுத்த உலகக் கோப்பை போட்டிகளில் ஆடுவது குறித்து மெஸ்ஸி நிருபரிடம் கூறியதாவது: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆட உண்மையில் அதிக ஆர்வத்துடன் உள்ளேன். கடந்த முறை வென்று சாம்பியன் பட்டம் பெற்றோம். அந்த பட்டத்தை மீண்டும் தக்க வைப்பதற்காக ஆடுவது மிகவும் சிறப்பான முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும். தேசிய அணியுடன் சேர்ந்து ஆடுவது என் வாழ்நாள் கனவாக இருந்து வருகிறது.

தனிப்பட்ட முறையில் பல சாதனைகளை நான் படைக்கும் வகையில் அதிர்ஷ்டக்காரனாக இருந்து வருகிறேன். அதேபோல், பார்சிலோனா அணியுடன் சேர்ந்து பலவற்றை சாதித்துள்ளேன். அதுவே ஒவ்வொரு விளையாட்டு வீரரின் கனவாக இருக்கும். எந்த விளையாட்டு வீரரை கேட்டாலும், அவரது பதில், உலக சாம்பியன் ஆக வேண்டும் என்பதாகவே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

* 114 கோல்

லியோனல் மெஸ்ஸி, இதுவரை 195 போட்டிகளில் ஆடியுள்ளார். அர்ஜென்டினா அணிக்காக 114 கோல்களை அவர் போட்டுள்ளார். 2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அவர் ஆடினால், அது, 6வது முறையாக இருக்கும்.

 

Tags : 2026 World Cup ,Messi ,New York ,Argentina ,2022 FIFA World Cup ,France ,Brazil ,
× RELATED உடல் நலக்குறைவால் அக்சர் படேலுக்கு ஓய்வு