×

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துக்கு துணை முதல்வர் உதயநிதி திடீர் விசிட்: மக்கள் புகார் மீதான நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்

சென்னை: சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள் அளித்த புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் பெய்யும் மழையின் அளவு, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து, மாநகராட்சிக்குட்பட்ட கால்வாய்களில் நீர்மட்டம், ஆறுகள் கடலுடன் கலக்கும் முகத்துவாரத்தில் உள்ள நிலவரம் குறித்து 24 மணி நேரமும் கண்காணித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கட்டுப்பாட்டு அறைக்கு 1913 தொலைபேசி மூலமாக வந்த புகார்கள், புகார்களின் விவரங்கள் பதிவேடுகளில் பதியப்பட்டுள்ளதா என்றும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார். மேலும், சமூக வலைதளங்கள் மூலமாக வரப்பெற்ற புகார்களின் எண்ணிக்கை, புகார்களின் விவரங்கள், புகார்தாரர்கள் அனுப்பிய புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றையும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், நடவடிக்கை மேற்கொள்ள எடுத்துக் கொண்ட நேரம், சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறித்து புகார்தாரர் தெரிவித்த கருத்துகள் ஆகியவற்றை கணினியில் பார்வையிட்டும், பணியாளர்களிடம் கலந்துரையாடியும் ஆய்வு மேற்கொண்டார்.

இதுதவிர, புகார்கள் குறித்து சம்பந்தப்பட்ட பகுதியை சேர்ந்த மாநகராட்சி அலுவலர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டுள்ளதா என்றும், அலுவலர்கள் புகாரை சரிசெய்ய எடுத்துக் கொண்ட காலஅளவு குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். மழை அதிக அளவில் பெய்கின்றதா என்றும், வெவ்வேறு சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீராக நடைபெறுகின்றதா என்றும் சுரங்கப்பாதைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ஒவ்வொரு சுரங்கப்பாதையாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். கட்டுப்பாட்டு அறையில் சுழற்சி முறையில் பணிபுரியும் பணியாளர் எண்ணிக்கை குறித்தும், அவர்களது பணிகள் குறித்தும் விரிவாக கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Deputy Chief Minister ,Udhayanidhi ,Chennai Corporation ,Chennai ,Udhayanidhi Stalin ,Corporation ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...