நாகர்கோவில், அக்.29: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், குமரி மாவட்டத்திலும் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக மழை நீடித்து வருகிறது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக கால்வாய்கள் நிரம்பி, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. ஒரு சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்தது. சாலைகளில் மழை நீர் தேங்குவதற்கு பல்வேறு தெருக்களில் கழிவு நீர் கால்வாய்கள் மண் நிரம்பி இருப்பது காரணமாக உள்ளது. இது தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில் தெருக்களிலும் கழிவு நீர் ஓடைகளை முறையாக தூர்வாரி மண், குப்பைகள் அகற்ற வேண்டும் என்று மேயர் மகேஷ், ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் உத்தரவிட்டு உள்ளனர். அதன்படி நாகர்கோவிலில் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு என மண்டல வாரியாக தற்போது தெருக்களில் கழிவுநீர் ஓடைகளை தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. மினி பொக்லைன் இயந்திரம் மூலம் கழிவு நீர் கால்வாய்களில் உள்ள மண், குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. தற்போது மழை பெய்து வரும் நிலையில் மாநகராட்சி சார்பில் ஏற்கனவே மீட்பு பணிகளுக்கான உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் குப்பைகள், கழிவுகளை வடிகால்களில் கொட்டக்கூடாது என்றும் மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
