×

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பொய் சாட்சியம் அளிப்பவருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவை எதிர்த்து வழக்கு: ஒன்றிய அரசு பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பொய் சாட்சியம் அளிப்பவருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவை நீக்கக் கோரும் வழக்கில், ஒன்றிய அரசு பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது.  திருச்சியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் ஷாஸிம் சாகர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்கும் நோக்கில் 1989ம் ஆண்டு வன்கொடுமை தடுப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது.

இந்தச் சட்டத்தின் 3(2)(i) பிரிவின்படி பட்டியலின அல்லது எஸ்சி, எஸ்டி பிரிவை சாராத ஒரு நபர், வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பட்டியல் சமூகத்தினருக்கு எதிராக பொய் சாட்சியம் அளித்தால், அவருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் மரண தண்டனை அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும், குடிமக்களின் அடிப்படை உரிமைகளை அமல்படுத்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பின் 32வது பிரிவின்கீழ் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே இதுபோன்ற வழக்குகளில் மரண தண்டனை விதிக்கும் பிரிவை செல்லாது என அறிவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்தார்.

இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.இடையீட்டு மனுதாரராக வழக்கறிஞர் ஜெகன் மனு தாக்கல் செய்தார். அதில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் ஏற்கனவே சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறி வரும் சூழலில் இந்த சட்டத்தை ரத்து செய்தால் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், `இந்த விவகாரத்தில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்’ என வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சக செயலாளர், மத்திய சட்ட அமைச்சக செயலாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Tags : Union Government ,Madurai ,Court ,Shasim Sagar ,Trichy… ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...