சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து ஆலோசிக்க சென்னையில் வரும் 2ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒன்றிய அரசின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எஸ்.ரகுபதி, தங்கம் தென்னரசு, எம்பிக்கள் டி.ஆர்.பாலு, என்.ஆர்.இளங்கோ, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி பொது செயலாளர் ரவிக்குமார் எம்பி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், முன்னாள் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலாளர் நவாஸ்கனி எம்பி, பொதுச்செயலாளர் அபூபக்கர், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிலைய செயலாளர் ஜெயினுலாபுதீன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைமை நிலைய செயலாளர் செல்வராஜ், மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் அருணாச்சலம், முன்னாள் எம்பி டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்துவது என்பது மிகமிகச் சிரமம் ஆகும். வடகிழக்கு பருவமழை பெய்து வரும் காலத்தில் வாக்காளர் பட்டியல் குறித்த இது போன்ற மிகப்பெரிய பணிகளைச் செய்வது சிரமம் ஆகும். உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஆதார் அட்டையை முழுமையான ஆவணமாக ஏற்க மறுப்பது ஏன்? குடும்ப அடையாள அட்டைகளை முழுமையான ஆவணமாக ஏற்க வேண்டும் என்று நாங்கள் இதுவரை வைத்த கோரிக்கையை ஏற்க மறுப்பது ஏன்? ஏப்ரல் மாதம் தேர்தலை வைத்துக் கொண்டு இப்போது இதனைச் செய்ய தொடங்குவது சரியானது அல்ல. வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் பங்கேற்கும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நவம்பர் 2ம் தேதி(ஞாயிறு) காலை 10 மணி அளவில், தியாகராய நகரில் உள்ள ஓட்டல் அகார்டில் நடைபெற இருக்கிறது. அக்கூட்டத்தில் தலைவர்கள் வைக்கும் கோரிக்கைகள் அடிப்படையில் நமது அடுத்த கட்ட செயல்பாடுகள் அமையும். தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் மனதில் வைத்து அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒன்று சேர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
