புதுடெல்லி: ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகள் ஜனாதிபதி திரவுபதி முர்முவை ராஷ்டிரபதி பவனில் நேற்று சந்தித்தனர். இந்த நிகழ்வில் ஜனாதிபதி முர்மு பேசியதாவது: உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது.பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்தவும் துரிதப்படுத்தவும் பெருமளவிலான பொது மற்றும் தனியார் முதலீடுகள் தேவை. எந்தவொரு மாநிலத்திலோ, பிராந்தியத்திலோ முதலீட்டை ஈர்ப்பதற்கு சட்டம் ஒழுங்கு அவசியமான முன்நிபந்தனையாகும். முதலீடு மற்றும் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் காவல் பணி முக்கியமானது.
இளம் அதிகாரிகள் தலைமையிலான காவல் படை, விக்சித் பாரத் உருவாவதில் முக்கிய பங்கு வகிக்கும்.10 ஆண்டுகளுக்கு முன்பு, டிஜிட்டல் கைது என்றால் என்ன என்பது யாருக்கும் தெரியாது. இன்று, இது குடிமக்களுக்கு மிக பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாகி உள்ளது.இந்தியா மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு பயனர் தளங்களில் ஒன்றாகும். இது காவல் துறையையும் பாதிக்கும்.தவறான நோக்கத்துடன் இந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துபவர்களுடன் ஒப்பிடும்போது, ஏஐ உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதில் நீங்கள் பல படிகள் முன்னேற வேண்டும் என்றார்.
