புதுடெல்லி: குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக டெல்லியில் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவயில் நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் 53 பேர் பலியாகினர். இந்த கலவரத்தை தூண்டியதாக சமூக ஆர்வலர்கள் உமர் காலித், ஷர்ஜீல் இமாம், குல்பிஷா பாத்திமா உள்ளிட்டோர் கடந்த 2020ல் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 5 ஆண்டாக சிறையில் உள்ள காலித், இமாம் உள்ளிட்ட 9 பேர் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் ஜாமீன் தர மறுத்து கடந்த செப்டம்பர் 2ம் தேதி மனுக்களை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து 9 பேர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் டெல்லி காவல்துறை பதிலளிக்க கடந்த மாதம் 22ம் தேதி உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில் நீதிபதிகள் அரவிந்த் குமார், என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய 2 வார காலம் அவகாச தர வேண்டுமென டெல்லி காவல்துறை தரப்பில் கேட்கப்பட்டது. இதை நிராகரித்த நீதிபதிகள், ‘‘நாங்கள் ஏற்கனவே போதுமான அவகாசம் அளித்துள்ளோம். கடந்த முறை நோட்டீஸ் அனுப்பும் போதே, அக்டோபர் 27ம் தேதி இந்த வழக்கை விசாரித்து முடிப்பதாக கூறியிருந்தோம். எனவே விசாரணை வரும் 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது’’ என உத்தரவிட்டனர்.
