லண்டன்: இங்கிலாந்தில் இந்திய வம்சாளி இளம்பெண் இன ரீதியாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வெள்ளையின வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இங்கிலாந்தின் மேற்கு மிட்லாண்ட்ஸ் மாகாணம் வால்சால் நகரில் வசிப்பவர் 20 வயது இந்திய வம்சாவளி இளம்பெண். பஞ்சாபி. கடந்த 25ம் தேதி, இவர் இன ரீதியாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளி என்பதற்காக இளம்பெண்ணின் வீட்டின் கதவை உடைத்துச் சென்ற வெள்ளையினத்தவர் ஒருவர் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக மேற்கு மிட்லாண்ட்ஸ் காவல்துறையில் புகார் தரப்பட்டுள்ளது. போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி பதிவுகளை பெற்று வெள்ளையின வாலிபரின் புகைப்படத்தை வெளியிட்டனர். தீவிர தேடுதல் வேட்டையின் கீழ் 32 வயதான சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த மாதம் ஓல்ட்பரி பகுதியில் இந்திய வம்சாவளியான சீக்கிய இளம்பெண் இதே போல இன ரீதியாக பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய இளம்பெண்களுக்கு எதிரான இன ரீதியான பாலியல் பலாத்கார சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
