டொரன்டோ: கனடா மகளிர் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் நேற்று, இந்திய நட்சத்திர வீராங்கனை அனாஹத் சிங் அதிரடி வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். கனடாவில் கனடா மகளிர் ஓபன் ஸ்குவாஷ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இந்தியா சார்பில் பங்கேற்று ஆடி வரும் அனாஹத் சிங் (17) சிறப்பாக செயல்பட்டு தொடர்ந்து முன்னேறி வருகிறார். நேற்று முன்தினம் நடந்த போட்டியில் சுவிட்சர்லாந்து வீராங்கனை சிண்டி மெர்லோவை வென்ற அனாஹத், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில், பிரான்ஸ் வீராங்கனை மெலிஸா ஆல்வ்ஸ் உடன் அனாஹத் மோதினார்.
உலகின் 20ம் நிலை வீராங்கனையான மெலிஸாவை முதல் இரு செட்களில் நிலைகுலையச் செய்த அனாஹத் சிங், 12-10, 12-10 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்களை கைப்பற்றினார். இருப்பினும் 3வது செட்டில் ஆதிக்கம் செலுத்திய மெலிஸா, 11-8 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். அதைத் தொடர்ந்து அடுத்த செட்டில் சுதாரித்து, ஆக்ரோஷமாக ஆடிய அனாஹத், 11-2 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்றார். அதனால், 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய அனாஹத், காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இதையடுத்து, காலிறுதிப் போட்டியில் பெல்ஜியத்தை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீராங்கனை டின்னே கிலிஸ் உடன் அனாஹத் மோதவுள்ளார்.
