அருமனை, அக்.28:ஆறுகாணி அருகே ஒருநூறாம்வயல் பகுதியில் இருந்து தோலடி வழியாக வண்ணத்திப்பாறை என்ற கிராமத்துக்கு செல்லும் சிறிய வழிப்பாதை உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 30 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கிராமத்துக்கு செல்லும் பாதையில் ஓடை ஒன்று உள்ளது. மழைக்காலங்களில் ஓடையில் அதிகளவில் தண்ணீர் செல்லும். அந்த சமயத்தில் வண்ணத்திப்பாறை கிராமத்துக்கு ஆம்புலன்ஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. தற்போது ஆறுகாணி பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஓடையில் தண்ணீர் செல்வதால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தோலடி- வண்ணத்திப்பாறை வழிப்பாதையில் ஓடையின் மேல் பகுதியில் சிறிய பாலம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
