ஆளுங்கட்சி நிர்வாகிகளிடம் பார்க்கிங் தள கடைகளுக்கு பல லட்சம் பணம் கொடுத்து ஏமாந்த வியாபாரிகள்'

ஊட்டி,  டிச. 31: ஊட்டியில் உள்ள என்சிஎம்எஸ் பார்க்கிங் தளங்களில் கட்டப்பட்டுள்ள  கடைகளுக்கு ஆளுங்கட்சி நிர்வாகி பல லட்சம் வசூலித்த  நிலையில், ஓராண்டிற்கு மேலாக கடைகள் கிடைக்காமல் வியாபாரிகள் தவிக்கிறார்கள். ஊட்டி தாவரவியல் பூங்கா செல்லும் வழித்தடத்தில் உள்ள கூட்டுறவுத்துறை  (என்சிஎம்எஸ்) சார்பில் பார்க்கிங் தளம் சீரமைக்கும் பணிகள் கடந்த மூன்று ஆண்டுக்கு முன் ரூ.2  கோடியில் துவக்கப்பட்டது. ஆனால்,  பார்க்கிங் தளம் இதுவரை முழுமையாக சீரமைக்கப்படவில்லை. மேலும், இந்த  பார்க்கிங் தளத்தில் புதிதாக 24 கடைகள் கட்டப்பட்டன. இந்த கடைகளை ஏலம் விட  கடந்த சில மாதங்களுக்கு முன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால்,  அப்போது ஆளுங்கட்சியினர் தலையீட்டால் ஏலம் விட முடியாத நிலை ஏற்பட்டது.  மேலும், அப்போது ஆளுங்கட்சி நிர்வாகி ஒருவர் தனது ஆதரவாளர்களுக்கு கடைகளை ஒதுக்க வேண்டும் என கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டார். மேலும், இந்த கடைகளை ஏலம் விடும்போது, தனது  ஆதரவாளர்களுக்கு கடைகளை பெற்றுத்தருவதாக கூறி பல லட்சம் வரை வசூல்  செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடைகளை கேட்டு பலர் ரூ.2 லட்சம் முதல் 5 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால், அவர் யாருக்கும் கடைகளையும் பெற்றுத் தரவில்லை. பணத்தையும் திரும்பி தரவில்லை. இது ஒருபுறம் இருக்க சம்பந்தப்பட்ட ஆளும்கட்சி நிர்வாகிக்கு ஊட்டி நகரில்  ஆதரவு தெரிவித்து வந்த மேலும் 2 ஆளும்கட்சி பிரமுகர்கள் வியாபாரிகளிடம் பணத்தை வாங்கிக் கொடுத்துள்ளனர். கடைகள்  கிடைக்காத நிலையில், வியாபாரிகள் நாள்தோறும் நிர்வாகிகளின் வீட்டிற்கு  நடையாய் நடக்க ஆரம்பித்துள்ளனர்.

பணத்தை  திருப்பி கொடுக்க வேண்டும். இல்லையேல் கட்சி பெயர் கெட்டுவிடும் என  அவர்கள் முறையிட்டுள்ளனர். ஆனால், நிர்வாகியோ என்னிடம் பணம் ஏதுமில்லை. அனைத்தும் செலவாகிவிட்டது என  கைவிரித்துவிட்டாரம். கடைகள் கேட்டு பணம் கொடுத்த பலரும் நாள்தோறும் பிரமுகர்களை நச்சரித்தனர். எனவே அந்த பிரமுகர்கள் தற்போதைய மாவட்ட செயலாளரிடம்  தஞ்சம் அடைந்துள்ளனர்.

எப்படியாவது பணம் கொடுத்தவர்களுக்கு கடைகளை கிடைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்களாம். மாவட்ட  செயலாளராக உள்ள கப்பச்சி வினோத், பணம் கொடுத்து ஏமாந்தவர்களுக்கே கடைகளை  கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதனால்,  இரு ஆண்டுகளாக நீடித்து வந்த ஊட்டி என்சிஎம்எஸ் கடை பிரச்சனைக்கு தீர்வு  கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>