×

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!!

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், கரூர் மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்திருந்தது. மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இதையடுத்து முன் ஜாமீன் மனுவை வாபஸ் பெற விரும்புவதாகக் கூறி ஐகோர்ட்டில் புஸ்ஸி ஆனந்த் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமின் மனு இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீதான வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட நிலையில், முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெறுவதாக அவர் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு இதற்கு அனுமதி அளித்து, அவருடைய முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Tags : Karur ,T.V.K. ,General Secretary ,Pussy Anand ,Chennai ,T.V.K. General Secretary ,Veluchamipuram ,Vijay Prasad.… ,
× RELATED வெப்பநிலை குறைந்தது தமிழ்நாட்டில்...