×

பதவியேற்றபின் முதல்முறையாக இன்று தமிழகம் வருகை பசும்பொன்னில் 30ம் தேதி துணை ஜனாதிபதி மரியாதை: கோவை, திருப்பூர் நிகழ்ச்சியிலும் பங்கேற்பு

திருப்பூர்: துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றபிறகு சி.பி.ராதாகிருஷ்ணன் 4 நாள் பயணமாக இன்று முதன்முறையாக தமிழகம் வருகிறார். கோவை, திருப்பூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர் 30ம் தேதி பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். இந்தியாவின் துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்த மாதம் 12ம் தேதி பொறுப்பேற்றார். அவர் பதவியேற்ற பின் முதன் முறையாக 4 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார்.  சென்னை மற்றும் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

கோவை கொடிசியா வளாகத்தில் 28ம் தேதி காலை தொழில்துறையினர் பாராட்டு விழாவில் பங்கேற்ற பின் டவுன்ஹால் பகுதியில் உள்ள காந்திசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதைத்தொடர்ந்து பேரூரில் உள்ள கல்லூரி விழாவில் பங்கேற்கிறார். பின்னர் மாலை திருப்பூருக்கு செல்கிறார். திருப்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள குமரன் நினைவகத்தில் திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் அவர் மாநகராட்சி அலுவலகம் அருகே காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

அதனை தொடர்ந்து ஷெரிப் காலனி பகுதியில் உள்ள இல்லத்திற்கு செல்லும் அவர் 29ம் தேதி தனது பூர்வீக கிராமமான சந்திராபுரம் பகுதியில் உள்ள கோயில் உட்பட பல்வேறு கோயில்களுக்கும் சென்று வழிபடுகிறார். இதனை தொடர்ந்து தாராபுரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பல்வேறு தொழில் அமைப்புகள், அரசியல் கட்சிகள் சார்பில் நடத்தப்படவுள்ள பாராட்டு விழாவில் கலந்து கொள்கிறார்.

இதனை தொடர்ந்து 30ம் தேதி மதுரை வருகிறார். அங்கு துணை ஜனாதிபதிக்கு பாஜ சார்பில் வரவேற்பு அளிக்கின்றனர். மதுரை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் செல்லும் அவர், முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியில் பங்கேற்று மரியாதை செலுத்துகிறார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மதுரை திரும்பும் அவர், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இரவு 7.20 மணிக்கு சுவாமி தரிசனம் செய்கிறார்.

அதன் பின்னர் மதுரை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார். துணை ஜனாதிபதி வருகையையொட்டி கோவை, திருப்பூர், மதுரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூரில் பாதுகாப்பு நடவடிக்கையாக குடியரசு துணை தலைவர் செல்லும் பகுதிகளில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதித்து கலெக்டர் மனீஷ் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Tamil Nadu ,Vice President ,Pasumpon ,Coimbatore ,Tiruppur ,C.P. Radhakrishnan ,Thevar memorial ,India ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...