சென்னை: உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அறைகள் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு சட்ட கல்லூரி கட்டிடத்தில் உயர் நீதிமன்றத்திற்காக கூடுதல் நீதிமன்ற அறைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் ரூ.23.13 கோடி செலவில் 130 ஆண்டுகால பாரம்பரிய சட்ட கல்லூரி கட்டிடம் முழுவதும் பராமரிக்கப்பட்டு 6 நீதிமன்ற அறைகள் அமைக்கப்பட்டது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. புதிய நீதிமன்ற அறைகளை உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி சூரிய காந்த் திறந்துவைத்தார்.
விழாவில் அவர் பேசுகையில், ‘‘சமுதாயத்துக்கும் சட்டத்துக்கும் நாம் இணைப்பு பாலமாக இருக்கவேண்டும். அதன்மூலம் சட்டத்தின் ஆட்சியை மக்களுக்கு தரவேண்டும். உண்மையான நீதிமனறம் என்பது கட்டிடம் மட்டுமல்ல. அது நீதியை வழங்கும் இடமாக இருக்கவேண்டும்’’ என்றார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோரும் சட்ட மேன்மை குறித்துப் பேசினர். ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை இணை மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால் பேசுகையில், ‘‘நீதித்துறையை பலப்படுத்த ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.
இந்த கட்டிடம் பல்வேறு முக்கிய தீர்ப்புகளை வழங்கும் இடமாக மாறவேண்டும்’’ என்றார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா பேசுகையில், ‘‘நீதித்துறைக்கு உள்கட்டமைப்பு மிகவும் அவசியம். வசதிகள் இல்லாமல் எந்த வழக்கும் நின்று விடக்கூடாது’’ என்றார். தமிழக நீதிமன்றங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசுகையில், ‘‘சென்னையின் முக்கிய அடையாளமாக திகழும் இந்த கட்டிடத்தை எந்த சேதமும் இல்லாமல், புனரமைக்கவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைத்து உரிய நிதியை வழங்கினார்.
அதன்படி இந்த கட்டிடம் சீரமைக்கும் பணி முடிவடைந்து உள்ளன. தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்துக்கான அடிப்படை கட்டமைப்பு வழங்குவதில் அதிக முன்னுரிமை தந்துள்ளது’’ என்றார். உயர் நீதிமன்ற கட்டிட குழு தலைவர் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் வரவேற்றார். அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆகியோரும் வாழ்த்தி பேசினர்.
நிகழ்ச்சியில் அகில இந்திய பார் கவுன்சில் துணை தலைவர் எஸ்.பிரபாகரன், தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், பார் கவுன்சில் உறுப்பினர்கள் சரவணன், ஆர்.சி.பால்கனகராஜ், மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் பாஸ்கர், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார், பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ரேவதி, லா அசோசியேசன் தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மூத்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் நன்றியுரையாற்றினார்.
