×

தாய்லாந்தின் ராணி காலமானார்

பாங்காக்: தாய்லாந்தின் முன்னாள் மகாராணியும், ‘தாய் ராணி’ எனப் போற்றப்பட்டவருமான சிரிகிட் காலமானார். தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்னின் தாயாரும், மறைந்த மன்னர் பூமிபால் அதுல்யதேஜின் மனைவியுமான சிரிகிட், கடந்த 2012ம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். கடந்த 2019ம் ஆண்டு பாங்காக்கில் உள்ள மன்னர் சுலலாங்கார்ன் நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த 17ம் தேதி அவருக்கு ரத்தத்தில் நோய்த்தொற்று ஏற்பட்டதால், அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் தனது 93வது வயதில் அவர் காலமானார்.

கடந்த 1932ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி பிறந்த சிரிகிட், தனது கணவர் மன்னர் பூமிபால் 70 ஆண்டுகள் ஆட்சி செய்த காலம் வரை, மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டார். தாய்லாந்து மக்களால் ஒரு தாயாகவே பார்க்கப்பட்ட இவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 12ம் தேதி, 1976ம் ஆண்டு முதல் அந்நாட்டின் அன்னையர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ராணி சிரிகிட்டின் உடல், பாங்காக்கில் உள்ள கிராண்ட் அரண்மனையில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. மேலும், ஓராண்டு காலம் துக்கம் அனுசரிக்கப்பட உள்ளது.

Tags : Queen Sirikit ,Thailand ,Bangkok ,Queen Mother ,Sirikit ,King ,Maha Vajiralongkorn ,Bhumibol Adulyadej ,
× RELATED ஆஸ்திரேலியா துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் தந்தை – மகன்