கொச்சி: பிரபல மலையாள நடிகர் திலீப்பின் வீடு கேரள மாநிலம் ஆலுவாவில் உள்ளது. இந்த நிலையில், நேற்று மாலையில் திலீப்பின் வீட்டு சுவர் ஏறி குதித்து ஒருவர் உள்ளே நுழைந்துள்ளார். இதை பார்த்த பாதுகாவலர்கள் அந்த நபரை மடக்கி பிடித்தனர். உடனே போலீசுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் விரைந்து வந்து வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த வாலிபர் மலப்புரம் மாவட்டம், திரிபாஞ்சி என்ற இடத்தை சேர்ந்த அபிஜித்(29) என்பது தெரியவந்தது. வாழக்குளம் என்ற இடத்தில் டிரைவராக பணியாற்றி வருவதாக கூறினார்.
கடும் போதையில் இருந்த வாலிபர் அபிஜித் தான் திலீப்பின் தீவிர ரசிகர் என்றும் அவரை காணவே வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாக தெரிவித்தார். வாலிபரை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
