சென்னை: சென்னை ஐஐடியில் நடந்த அறியவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளுக்கான கண்காட்சியில் 38 கல்வி நிறுவனங்கள் கலந்துகொண்டன. சென்னை கிண்டி ஐஐடி வளாகத்தில் ‘‘சிந்தனைக்கு செயல் கொடுப்போம்” எனும் கருப்பொருளில் மாணவர்களுக்கான புத்தொழில் மற்றும் அறிவியல் சார்ந்த சிந்தனைகளுக்கு செயல் கொடுக்கும் விதமாக கண்காட்சி நேற்று நடத்தப்பட்டது. இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சார்ந்த 38 தயாரிப்புகள் மற்றும் அறிவியல் சிந்தனைகள் மூலம் உருவாக்கப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சியை சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தொடங்கி வைத்தார். அவர் கூறுகையில், ‘‘ஜீரோ கார்பன் வெளியேற்றம் என்கின்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு மாணவர்களின் சிந்தனைகளை செயலாக்கும் வகையில் 2வது ஆண்டாக இந்த கண்காட்சி நடைபெறுகிறது. மாணவர்களை டிபார்ட்மெண்ட் வாரியாக பிரிக்காமல் இன்ஜினியரிங் ஸ்கூல் என்கின்ற வகையில் புதிய பாடம் முறையை அறிமுகப்படுத்தினால் நன்றாக இருக்கும்’’ என்றார்.
பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: மாணவர்களின் சிந்தனைகளை ஸ்டார்ட்-அப் நோக்கி கொண்டு செல்வதுதான் இதன் நோக்கம். இந்த ஆண்டு 38 கல்வி நிறுவனங்களில் இருந்து கலந்துகொண்டுள்ளனர். சிறப்பாக இருக்கும் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் அவர்களுடைய சிந்தனையை மேலும் செயலாக்கும் வகையில் கொடுக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
