×

உயர் நீதிமன்ற வளாகத்தில் தாக்குதல் விவகாரம் காவல்நிலையத்தில் வழக்கறிஞர், விசிகவினர் ஆஜராகி விளக்கம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தாக்குதல் விவகாரத்தில், வழக்கறிஞர் ராஜீவ் காந்தி, விசிகவினர் காவல் நிலையத்தில் ஆஜராகினர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது, வழக்கு விசாரணையின்போது, காலணி வீச முயற்சி நடந்தது. இதை கண்டித்து, கடந்த அக்.7ம் தேதி விசிகவின் சமத்துவ வழக்கறிஞர் சங்கம் சார்பில், ஐகோர்ட் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்று பேசினார். மதியம் 2.30 மணியளவில் உயர் நீதிமன்றம் அருகே, என்.எஸ்.சி., போஸ் சாலை வழியாக, திருமாவளவன் காரில் சென்றார்.

அப்போது, முன்னாள் சென்ற ஸ்கூட்டர் மீது, திருமாவளவன் சென்ற கார் மோதியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், திடீரென திருமாவளவன் கார் ஓட்டுநருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே, காரில் திருமாவளவன் இருந்ததால் வி.சி.கவினர் ஒன்றுகூடி வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அதன்பின் தாக்கப்பட்ட வழக்கறிஞரை, போலீசார், எஸ்பிளனேடு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர் அதிமுகவை சேர்ந்த முன்னாள் வட்டச் செயலரும், வழக்கறிஞருமான நந்தம்பாக்கத்தை சேர்ந்த ராஜீவ் காந்தி (36) என்பது தெரிய வந்தது. அவர் தன் மீது தாக்குதல் நடத்திய, விசிகவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, போலீசில் புகார் அளித்தார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி, அரசியல் ரீதியாகவும் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தில் இரு தரப்பினர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக, இரு தரப்பினருக்கும் எஸ்பிளனேடு காவல் நிலைய போலீசார் சம்மன் அனுப்பினர். மேலும், இரண்டு தரப்பினரையும் தனித்தனியாக ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.
தாக்குதலுக்கு ஆளான வழக்கறிஞர் ராஜீவ் காந்தி நேற்று காலை 11 மணிக்கு சென்னை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் ஆஜராகும்படி சம்மன் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து ராஜீவ் காந்தி நேற்று கழுத்தில் காயத்துடன் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். பின்னர் விசிகவை சார்ந்தவர்கள் நேற்று மாலை 6 மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கமளித்தனர். இருதரப்பு வாக்குமூலங்களையும் போலீசார் பதிவு செய்து இருப்பதாகவும், அத்துடன், ராஜீவ் காந்தி அங்கு எதற்காக சென்றார் என்ற விவரங்கள் மற்றும் பிற ஆதாரங்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு, அதன் பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : VKC ,High Court ,Chennai ,Rajiv Gandhi ,Madras ,Supreme Court ,Chief Justice ,P.R. Kawai ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...