×

மதுராந்தகம் அருகே பரபரப்பு அரசுக்கு சொந்தமான 240 ஏக்கர் நிலம் மீட்பு: அதிகாரிகள் அதிரடி

சென்னை: மதுராந்தகம் அருகே அரசுக்குச் சொந்தமான 240 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த கூடலூர் ஊராட்சியில் மேய்க்கால் புறம்போக்கு, நீர்நிலை புறம்போக்கு நிலம் என அரசுக்கு சொந்தமான சுமார் 240க்கும் அதிகமான ஏக்கர் நிலத்தை அப்பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமித்து வைத்திருந்தனர். இதனால், அப்பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு பணிகளை கிராம மக்களை செய்யவிடாமல் ஆக்கிரமிப்பாளர்கள் தடுத்து வந்தனர்.

இதை தொடர்ந்து, பொதுநல வழக்கு மூலமாக உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. வருவாய் கோட்டாட்சியர் ரம்யா, வட்டாட்சியர் பாலாஜி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமார், கிராம நிர்வாக அலுவலர் தர்மலிங்கம், மேல்மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதாபதி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டன.

தொடர்ந்து அந்த நிலப்பகுதிகளை யாரும் பயன்படுத்தக்கூடாது என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாக இந்த அரசு புறம்போக்கு நிலம் 240 ஏக்கரில் சுமார் சர்வே எண் 254, 253, 18 ஆகியவற்றில் அடங்கிய 135 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து வந்தனர். இந்த பகுதியில் கிராம மக்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளை மேய்க்கவோ, அல்லது மக்கள் நலப் பணிகளுக்காக 100 நாள் வேலை திட்டத்தை மேற்கொள்ளவோ அவர்கள் அனுமதிக்காமல் தடுத்து வந்தனர். இந்நிலையில் தற்போது அந்த நிலப்பகுதி முழுவதும் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு தற்போது சுமார் ரூ.25 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags : Madhurantakam ,Chennai ,Gudalur panchayat ,Chengalpattu district ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...