×

3வது ஓடிஐயில் தூசி ஆன ஆஸி; அரை சதம் விளாசி கோஹ்லி அட்டகாசம்: 121 ரன் குவித்து ரோகித் ருத்ர தாண்டவம்

சிட்னி: ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியுடனான 3வது ஒரு நாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான ரோகித் சர்மா – விராட் கோஹ்லி, ஆஸி பந்து வீச்சாளர்களை வேட்டையாடி ரன்களை குவித்ததால் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா மெகா வெற்றி பெற்று சாதனை படைத்தது. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்றுள்ள, சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் போட்டிகளில் ஆடியது. ஏற்கனவே முடிந்த 2 போட்டிகளிலும் இந்தியா தோல்வியை தழுவி, 2-0 என்ற கணக்கில் தொடரை இழந்த நிலையில், சிட்னி நகரில் நேற்று 3வது ஒரு நாள் போட்டி நடந்தது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா துவக்க வீரர்கள் கேப்டன் மிட்செல் மார்ஷ் 41, டிராவிஸ் ஹெட் 29 ரன் எடுத்து சிறப்பான துவக்கம் தந்தனர். பின் வந்தோரில் மேத்யூ ஷார்ட் 30, மேட் ரென்ஷா 56, அலெக்ஸ் கேரி 24, கூப்பர் கனோலி 23 ரன் எடுத்தனர். கடைசி கட்டத்தில் ஆஸி வீரர்கள் சொதப்பியதால், 46.4 ஓவர் முடிவில் அந்த அணி 236 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்திய தரப்பில் ஹர்சித் ராணா 4, வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
அதையடுத்து, 237 ரன் வெற்றி இலக்குடன் இந்தியா களமிறங்கியது. துவக்க வீரராக ரோகித் சர்மாவுடன் களமிறங்கிய கேப்டன் சுப்மன் கில் 24 ரன்னில் வீழ்ந்தார். அதன் பின் ரோகித் சர்மாவுடன், விராட் கோஹ்லி இணை சேர்ந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஆஸி பந்து வீச்சாளர்களை வேட்டையாடி ரன்களை குவித்தனர்.

ரோகித் – விராட் இணையை பிரிக்க முடியாமல் ஆஸி வீரர்கள் திணறினர். ஓவர்கள் செல்லச் செல்ல ரன்கள் மளமளவென குவிந்தன. மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசல்வுட் உட்பட 7 வீரர்கள் மாறி மாறி பந்துகளை வீசியபோதும் விக்கெட் வீழ்ந்தபாடில்லை. அட்டகாச ஃபார்மில் இருந்த ரோகித் சர்மா 125 பந்துகளில் 3 சிக்சர், 13 பவுண்டரிகளுடன் 121 ரன்னும், விராட் கோஹ்லி 81 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 74 ரன்னும் குவிக்க, 38.3 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து, இந்தியா 237 ரன் எடுத்தது. அதனால், 69 பந்துகள் மீதமிருக்க, 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா மறக்க முடியாத வகையில் மெகா வெற்றியை ஆஸி மண்ணில் பதிவு செய்தது. இது, சிட்னியில் இந்தியா பெற்ற 2வது ஒரு நாள் போட்டி வெற்றியாகும். தவிர, 2வது விக்கெட்டுக்கு ரோகித் – விராட் இணை, ஆட்டமிழக்காமல் 168 ரன்கள் குவித்து ரசிகர்களுக்கு பெருவிருந்து படைத்து, ஆறுதல் அளித்தனர்.

ஓடிஐயில் 14255 ரன் கோஹ்லி சாதனை: ஆஸ்திரேலியா அணியுடனான 3வது ஒரு நாள் போட்டியில் அமர்க்களமாக ஆடிய விராட் கோஹ்லி ஆட்டமிழக்காமல் 74 ரன் குவித்தார். இதனுடன் சேர்த்து, 293 இன்னிங்ஸ்களில் அவர் 14255 ரன்களை குவித்துள்ளார். இதன் மூலம், உலகளவில் ஒரு நாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கருக்கு (18426 ரன்) பின் அதிக ரன் குவித்த 2வது வீரர் என்ற சாதனையை கோஹ்லி படைத்துள்ளார். இதுவரை 2ம் இடம் வகித்து வந்த இலங்கையின் குமார் சங்கக்கரா (14234 ரன்) 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

கேட்ச் பிடிப்பதிலும் ரோகித் சென்சுரி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது ஓடிஐயில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தபோது, ஹர்சித் ராணா வீசிய பந்தில், மிட்செல் ஓவனை கேட்ச் செய்தும், பிரசித் கிருஷ்ணா வீசிய பந்தில் நாதன் எலிசை கேட்ச் செய்தும் ரோகித் சர்மா அவுட் ஆக்கினார். இதன் மூலம், ஒரு நாள் போட்டிகளில் 100 கேட்ச் பிடித்த 6வது இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் படைத்தார். இந்த பட்டியலில், விராட் கோஹ்லி 163 கேட்ச்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

Tags : Kohli ,Sydney ,Rohit Sharma ,Virat Kohli ,Australia ,India ,
× RELATED தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது டி20 இந்திய அணி வெற்றி