×

திருவள்ளூர் அருகே போதை பொருட்கள் கடத்தி வந்த இன்ஸ்டா பிரபல டான்சர் கைது

திருவள்ளூர்: சென்னை ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் சிபிராஜ் (22). நடன கலைஞரான இவர், ஈக்காட்டுதாங்கல் பகுதியில் டான்ஸ் பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார். மேலும் தனது டான்ஸ் நடன வீடியோக்கள் பதிவு செய்து சமூகவலைதள பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை ஏராளமானோர் பின்தொடர்கின்றனர்.

இந்த நிலையில், திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வேகமாக வந்த சிபிராஜை மறித்து சோதனை செய்தபோது பதற்றத்துடனும் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், சிபிராஜை சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட 55 கிராம் மதிப்புள்ள மெத்தபெட்டமின் போதை பொருட்கள் வைத்திருந்தார். மேலும் 4 லைட்டர்கள், விலை உயர்ந்த 2 செல்போன்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். திருவள்ளூரில் விற்பனை செய்வதற்காக போதை பொருளை எடுத்துவந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து சிபிராஜை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

‘’திருவள்ளூர் பகுதியில் போதை மாத்திரைகள், போதை பொருட்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் ஏராளமான இளைஞர்கள் இந்த பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். எனவே, போலீசார் இரும்புக்கரம் கொண்டு போதை பொருட்கள் கடத்தலை தடுக்கவேண்டும்’’ என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thiruvallur ,SIBRAJ ,RAMAPURAM ,CHENNAI ,Ekatutthangal ,Instagram ,
× RELATED தாய்லாந்து சுற்றுலா சென்று கஞ்சா...