கூடலூர், அக். 25: ஊசிமலை காட்சிமுனை பகுதியில் குட்டியுடன் நடமாடும் இரண்டு காட்டு யானைகள் நடமாட்டம் காரணமாக இரண்டாவது நாளாக நேற்றும் மூடப்பட்டது. காட்சிமுனை பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கூடலூர்- ஊட்டி சாலையில் உள்ள ஊசிமலை காட்சிமுனை பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. யானைகள் இல்லாத நேரங்களில் சுற்றுலா பயணிகள் இங்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஒரு குட்டியுடன், 2 காட்டு யானைகள் இப்பகுதியில் உலா வந்ததால், அன்று சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி, காட்சிமுனை மூடப்பட்டது. நேற்றும் யானைகள் நடமாட்டம் இருந்ததால், 2வது நாளாக காட்சிமுனை மூடப்பட்டு, சுற்றுலா பயணிகள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,“இந்த யானைகள் வனத்தின் உள் பகுதிக்கு சென்ற பின்னரே காட்சிமுனை பகுதிக்குள் சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். யானைகள் நடமாட்டம், இடம் பெயர்தல் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம்’’ என்றனர்.
