அவனியாபுரம்: மதுரையிலிருந்து துபாய்க்கு தனியார் விமான சேவை தினமும் இயக்கப்பட்டு வருகிறது. துபாயில் இருந்து காலை 11.10 மணிக்கு மதுரை வந்து சேரும் விமானம், மீண்டும் மறுமார்க்கத்தில் பகல் 12.20 மணிக்கு துபாய் புறப்பட்டு செல்லும். நிர்வாக காரணங்களுக்காக அக். 17ம் தேதி முதல் அக். 25 வரை துபாய் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. துபாய் செல்வதற்காக சில மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்திருந்த ஒரு பயணிக்கு விமானம் ரத்து குறித்த தகவல், அவரது இமெயில் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்த தகவலை பார்க்காத அந்த பயணி, தான் முன்பதிவு செய்திருந்த நேரத்தை கணக்கிட்டு மதுரை விமான நிலையத்துக்கு நேற்று வந்தார். அப்போது அவரிடம் விமானம் ரத்து தொடர்பான தகவலை தெரிவித்த விமான நிறுவனத்தினர், அவருக்கு மாற்று ஏற்பாடாக நாளை (அக். 26) பயணம் செய்ய முன்பதிவை மாற்றிக் கொடுத்தனர்.
