சென்னை: தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து 22 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உள்பட 33 வீரர்களுக்கு ரூ.43.20 லட்சத்துக்கான காசோலைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து, வரும் 17.11.2025 முதல் 24.11.2025 வரை தாய்லாந்தில் நடைபெற உள்ள உலக திறன் விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த தேசிய பாரா சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் பா.மனோஜ், அருள்ராஜ் பாலசுப்பிரமணியன், செ.முனியசாமி, த.கதிர், க.கணேசன், கே.எம்.ஷேக் அப்துல் காதிர், குமரேசன் ஆனந்தன், சா.வினோத் குமார், ரா.பிரவீன் குமார், ச.குரு பாஸ்கர சேதுபதி, வே.பிரகாஷ், மு.சோனை, ச.பிரசாந்த், கெவின் ஜோசப் ஆண்டனி, க.சஞ்சய் கன்னா, ரா.கோகுலகண்ணன், மு.ஆனந்த்ராஜ், பி.சந்தனகுமார், வீராங்கனைகள் கு.ஆனந்தி, ர.வெண்ணிலா, சி.இன்பத்தமிழி, கு.விஜ ஆகிய 22 மாற்றுத்திறன் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இவர்களுக்கு போட்டியில் கலந்துகொள்வதற்கான செலவினமாக தலா 1,65,000 ரூபாய் என மொத்தம் ரூ.36 லட்சத்து 30 ஆயிரத்துக்கான காசோலைகளை சென்னை முகாம் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வழங்கினார். மேலும் 2.12.2025 முதல் 6.12.2025 மாலத்தீவில் நடைபெறும் 7வது கேரம் உலகக் கோப்பை போட்டியில் கலந்துகொள்ள உள்ள, தேசிய அளவிலான கேரம் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனைகள் எல்.கீர்த்தனா, எஸ்.இளவழகி, 6வது கேரம் உலகக்கோப்பை போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற வீராங்கனை வி.மித்ரா ஆகிய 3 விளையாட்டு வீராங்கனைகளுக்கு போட்டிக்கான செலவினமாக தலா ரூ.1,50,000 என மொத்தம் ரூ.4,50,000க்கான காசோலைகளை வழங்கினார்.
மேலும் தடகள விளையாட்டு வீராங்கனைகள் பி.கனி, ரூபிகா, எ.தாரணி, எம்.நந்தனா, பார்த்திபா செல்வராஜ், கே. யாமினி, விஐயலட்சுமி, கே. நந்தினி ஆகிய 8 வீராங்கனைகளுக்கு பயிற்சிக்கான விளையாட்டு உபகரணங்கள் வாங்கிட தலா ரூ.30 ஆயிரம் என மொத்தம் ரூ.2.40 லட்சத்துக்கான காசோலையையும் வழங்கினார்.
