×

பல லட்சத்திற்கு போதைப்பொருள் வாங்கி பயன்படுத்திய விவகாரம் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா 28ல் நேரில் ஆஜராக வேண்டும்: சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தில் அமலாக்கத்துறை நடவடிக்கை

சென்னை: வெளிநாட்டு போதை பொருள் கும்பலுடன் தொடர்பு ஏற்படுத்தி கொண்டு, பல லட்சத்திற்கு போதை பொருட்கள் வாங்கி பயன்படுத்திய விவகாரத்தில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து, நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும்கிருஷ்ணாவுக்கு வரும் 28 மற்றும் 29ம் ஆகிய தேதிகளில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பார் ஒன்றில் கடந்த மே 22ம் தேதி நடந்த அடிதடி வழக்கில் முன்னாள் அதிமுக ஐடி விங்க் நிர்வாகி பிரசாத் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அதில் பிரசாத்திடம் நடத்திய விசாரணையின் போது, சினிமா நடிகர்களுக்கு மெத்தப்பெட்டமைன் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து பிரசாத் அளித்த வாக்குமூலத்தின்படி, சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த பிரதீப்குமார்(எ)பிரடோ(38) மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா கானா நாட்டை சேர்ந்த ஜான்(38) என்பவரை கடந்த ஜூன் 17ம் தேதி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சினிமா நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த 2023ம் ஆண்டு முதல் 40 முறை அதாவது ரூ.4.72 லட்சத்திற்கு கொக்கைன் வாங்கி பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. அதற்கான பணத்தை ஸ்ரீகாந்த் தனது ஜி-பே மூலம் பிரதீப்குமாருக்கு அனுப்பியதும் தெரியவந்தது.

அதனை தொடர்ந்து போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நுங்கம்பாக்கம் லேக் வியூ பகுதியில் வசித்து வரும் நடிகர் காந்தை கடந்த ஜூன் 23ம் தேதி கைது செய்தனர். அவர் வீட்டில் இருந்தும் போதை பொருள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் அளித்த தகவலின் படி மற்றொரு நடிகரான கிருஷ்ணா மொத்தப்பெட்டமைன் வாங்கி பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. அதன்படி நடிகர் கிருஷ்ணாவையும் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த போதை பொருள் வழக்கில் 2 நடிகர்கள் உள்பட 22க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து 11.5 கிராம் கொக்கைன், 10.3 கிராம் மொத்தப்பெட்டமைன், 2.7 கிராம் எம்டிஎம்ஏ, 2.4 கிராம் ஓ.ஜி கஞ்சா, 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் 15 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்த நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோரை சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீனில் விடுவித்தது . இந்த வழக்கில் வெளிநாட்டு போதை பொருள் கும்பலுக்கு தொடர்பு இருப்பதால், பல லட்சம் ரூபாய் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்தது விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து தனது விசாரணையை தொடங்கியுள்ளனர்.

அதன் முதற்கட்ட விசாரணையாக போதை பொருள் கும்பலுடன் நேரடி தொடர்பு ஏற்படுத்தி கொண்டு போதை பொருள் வாங்க பணம் அனுப்பிய நடிகர் ஸ்ரீகாந்த் வரும் 28ம் தேதியும், நடிகர் கிருஷ்ணா வரும் 29ம் தேதியும் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வழக்கு தொடர்பான ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். அந்த சம்மனை 2 நடிகர்களும் பெற்று கொண்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இந்த விசாரணைக்கு பிறகு இந்த வழக்கில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்று முழுமையான விவரங்கள் தெரியவரும் என அமலாக்கத்துறை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

Tags : Srikanth ,Krishna ,Enforcement Department ,Chennai ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...