- திண்டுக்கல், நெல்லை
- திண்டுக்கல்
- ஊழல் தடுப்புத் துறை
- உதவி இயக்குனர்
- திண்டுக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை
- உதவி இயக்குனர்
- திண்டுக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை…
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று காலை அதிரடி சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனராக இருப்பவர் செல்வசேகர். திருநெல்வேலியை சேர்ந்தவர். இவர் கடந்த 2024ம் ஆண்டு முதல் திண்டுக்கல்லில் பணிபுரிந்து வருகிறார். இதற்காக கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஏழுமலையான் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். குடும்பத்தினர் சொந்த ஊரான திருநெல்வேலியில் உள்ளனர். முன்னதாக, செல்வசேகர் விருதுநகர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் உதவி இயக்குனராக கடந்த 2021-23ம் ஆண்டு வரை பணியாற்றினார்.
அப்போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், செல்வசேகர், அவரது மனைவி முருகம்மாள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதைதொடர்ந்து, திண்டுக்கல் ஏழுமலையான் நகரில் செல்வசேகர் தற்போது குடியிருக்கும் வீட்டிற்கு திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நாகராஜ் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர், நேற்று காலை 6.30 மணியளவில் வந்து சோதனை நடத்தினர். இந்த சோதனை காலை 9.30 மணி வரை நீடித்தது. அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘செல்வசேகர் 2015 முதல் நடப்பாண்டு வரை திருநெல்வேலி, விழுப்புரம், விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் பணிபுரிந்துள்ளார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின்பேரில் வழக்குப்பதிந்து சோதனை நடத்தினோம். சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ள ஆவணங்கள் அடிப்படையில் நடத்தப்படும் விசாரணையின்போது தான், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்துள்ளாரா என்பது தெரியவரும்’’ என்றனர்.
நெல்லை: பாளையங்கோட்டை என்ஜிஓ காலனி ஜெபா கார்டன் பகுதியில் வீமா சதுக்கம் 3வது தெருவில் உள்ள செல்வசேகர் வீட்டிற்கு நேற்று காலையில் நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வந்து சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. செல்வசேகர் பல்ேவறு குவாரிகளை பினாமி பெயரில் எடுத்து நடத்துவதாகவும், மோட்டார் பைக் ஒன்றின் ஏஜென்சியை பினாமி பெயரில் நடத்துவதாகவும் கனிமவளத்துறையில் நடைச்சீட்டு வழங்கும்போது, ஒரு நடைக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்கள் சென்ற நிலையில், அதை மையமாகக் கொண்டு நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தியதாக தெரிவித்தனர். அவரது சொத்துகள் விபரம், வங்கி கணக்குகள் உள்ளிட்டவற்றையும் ஆராய்ந்தனர்
* ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்
கனிமவளத்துறை உதவி இயக்குனர் செல்வசேகர் கடந்த 2014 முதல் 2016 வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியாற்றினார். அப்போது கனிமவளத்துறையில் நடந்த தணிக்கையில், இவர் வி.வி.மினரல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு முறைகேடாக கிரானைட் லைசென்ஸ் வழங்குவதில் துணையாக இருந்தது தெரிய வந்தது. இதன்பேரில் கடந்த 29-08-2016ல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் சென்னை தலைமை அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்த இவர், தஞ்சாவூரிலும், விருதுநகரிலும் உதவி இயக்குனராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
