- சிபிஐ
- புஸ்ஸி ஆனந்த்
- நிர்மல் குமார்
- கரூர் மாவட்டம்
- கரூர்
- தவெகா
- பொதுச்செயலர்
- கரூர் மேற்கு
- விஜய்
- வேலுச்சிபுரம்
- கரூர்...
கரூர்: விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் மற்றும் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர்கள் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரித்து வருகிறது. இதையடுத்து, கரூர் டவுன் போலீசார், ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு விசாரணை குழுவினர் தயாரித்து அளித்த ஆவணங்கள், அவர்களின் எப்ஐஆர் பதிவு அடிப்படையில் புதிதாக முதல் தகவல் அறிக்கையை தயாரித்து சிபிஐ குழுவை சேர்ந்த இன்ஸ்பெக்டர் மனோகரன் கரூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1ல் நீதிபதி சார்லஸ் ஆல்பர்ட் முன்னிலையில் கடந்த 22ம் தேதி தாக்கல் செய்தார்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பொதுவாக சிபிஐ ஒரு வழக்கை விசாரிக்கும் போது, முன்பு போடப்பட்டுள்ள எப்ஐஆரில் உள்ளதை வைத்து புதிய கிரைம் நம்பர் போட்டு முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்வது வழக்கம். அந்த அடிப்படையில் கரூர் டவுன் போலீசார், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், கரூர் மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் உள்பட பலர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையிலும் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, சிபிஐ விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் போது தான், 41 பேர் பலிக்கு யார் காரணம், தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட காரணங்களின் முழு விவரங்கள் தெரியவரும்,’’என்றார்.
* துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பயணியர் மாளிகையில் உயர்நீதிமன்றம் நியமித்த எஸ்ஐடியினர் தங்கியிருந்து விசாரணையை மேற்கொண்டனர். தொடர்ந்து, எஸ்ஐடியை ரத்து செய்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டது. அதனடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் கரூர் வந்து வழக்கு விவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர். சிபிஐ அதிகாரிகள் தங்கி விசாரணை மேற்கொள்ளவுள்ள பயணியர் மாளிகை முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் ஒருவர் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளார்.
