×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாரான 300 ஏக்கர் நெற்பயிர் மழைநீரில் மூழ்கின:  விவசாயிகள் வேதனை  உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை

காஞ்சிபுரம், அக்.25: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக அறுவடைக்கு தயாரான 300 ஏக்கர் நெற்பயிர் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக ஏரிகள், குளங்கள் நிரம்பியுள்ளன. இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கம்மவார்பாளையம், முசரவாக்கம், செம்பரம்பாக்கம், காலூர், கீழ்கதிர்பூர், கிழம்பி, வெளியூர் மற்றும் உத்திரமேரூர், பெரும்புதூர், வாலாஜாபாத் போன்ற பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 300 ஏக்கர் நெல் பயிர் மழைநீரில் மூழ்கி வீணாகியுள்ளது. மேலும், மானாவாரியில் பயிராக விதைத்த 1000 ஏக்கர் விதை நெல்லும் நீரில் மூழ்கி சேதமானது. இதனால், காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.

மழைநீரில் வீணாகிப்போன நெல் விதை, நெல் மற்றும் கரும்பு, நிலக்கடலை மற்றும் பருப்பு வகை பயிர்களுக்கும், வேளாண்மை துறை அதிகாரிகள் உரிய கணக்கெடுப்பு நடத்தி, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சாரங்கன் கூறுகையில், `காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி வீணாகிப்போனது. ஆகவே, மழைநீரில் மூழ்கி வீணாகிப்போன நெல் பயிர்களை உரிய கணக்கீடு செய்து, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அதேபோல, விதைத்த விதை நெல்களும் மழைநீரில் மூழ்கியது. இதில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண்மை துறை இலவசமாக வழங்க வேண்டும்’ என்றார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது பெய்த மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்தால் விவசாயம் பாதிக்கப்படும். எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராமங்களிலும், அனைத்து வட்டங்களிலும் வேளாண்மை துறை மற்றும் வருவாய் துறை கணக்கு எடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Kanchipuram district ,Kanchipuram ,
× RELATED மின் வாரிய அலுவலகம் முன்பு கொட்டப்படும் கட்டிட கழிவுகள்: அகற்ற கோரிக்கை