×

நகராட்சி பள்ளி மைதானத்தில் பல்நோக்கு விளையாட்டு அரங்க கட்டுமான பணி 80 சதவீதம் நிறைவு

*அதிகாரிகள் நேரில் ஆய்வு

பொள்ளாச்சி : கோவை மாவட்டத்தில் முக்கிய நகரமான பொள்ளாச்சி நகரில் பள்ளி, கல்லூரிகள் பல இருந்தாலும், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் விளையாட தனி ஸ்டேடியம் என்பது கிடையாது. நகரின் மையப்பகுதியில், விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன்னார்வலர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

சுமார் 17 ஆண்டுக்கு முன்பு, நகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளி பின்புறம் உள்ள மைதானத்தில், ஸ்டேடியம் அமைக்கும் முயற்சி நடந்தது. ஆனால் ஆண்டுகள் பல கடந்தும், ஸ்டேடியம் அமைக்கும் பணி என்பது, கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றபின், நகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளி மைதானத்தில், விளையாட்டு அரங்கம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்பின், விளையாட்டு அரங்கு அமைப்பதற்காக, சுமார் 3 ஆண்டுக்கு முன்பு ஆய்வு பணி நடந்தது.

இதையடுத்து, நமக்கு நாமே திட்டத்தில் ரூ.5 கோடியில் பல்வேறு வசதிகளுடன் பல்நோக்கு விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்டுமான பணி சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது. தற்போது இப்பணி சுமார் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் நேற்று விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணியை, கோவை மாவட்ட கூடுதல் கலெக்டர் சன்கித் பல்வந்த்வாகே, சப்-கலெக்டர் ராமகிருஷ்ணசாமி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அப்பணியை விரைந்து மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.
அதிகாரிகள் கூறுகையில்,

‘பொள்ளாச்சி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மைதானத்தில், சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் உள் விளையாட்டு அரங்கம் கட்டும் பணி தீவிரமாக நடக்கிறது. தமிழ்நாடு அரசு ரூ.2.50 கோடியும், ரூ.2.50 கோடி பொதுமக்கள் பங்களிப்பாக கட்டப்படுகிறது. இதுவரை சுமார் 80 சதவீத பணிகள் நிறைவடைந்தது. மேலும், மைதானத்தை சுற்றிலும் ஓடுதளம் அமைக்க ரூ.1.40 கோடி நீதி ஒதுக்கீடுகோரி கேட்கப்பட்டுள்ளது. இந்த பணி முடியும்போது பொள்ளாச்சி பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’ என்றனர்.

Tags : Pollachi ,Coimbatore ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...