×

மழைநீர் தேங்கிய பகுதிகளில் வாய்க்கால்களை தூர்வாரும் பணிகள் தீவிரம்

*முதல்வர் உத்தரவின் பேரில் நடவடிக்கை

புதுச்சேரி : புதுச்சேரியில் மழைநீர் தேங்கி நின்ற பகுதிகளில் முதல்வர் ரங்கசாமி உத்தரவின் பேரில் வாய்க்கால்களை தூர்வாரும் பணிகள் பொதுப்பணித்துறையால் முடுக்கி விடப்பட்டுள்ளன. புதுச்சேரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகபட்சமாக நகர பகுதியில் 21 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது.

இதனால் இந்திராகாந்தி சதுக்கம், காமராஜர் சாலை, 100 அடி ரோடு, வெங்கட்டா நகர், தேங்காய்திட்டு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி நின்றது. இதனால் வாகன போக்குவரத்து முடங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அப்பகுதிகளை ஆய்வு செய்த முதல்வர் ரங்கசாமி, இந்திராகாந்தி சதுக்கத்துக்கு கனகன் ஏரி மற்றும் சண்முகாபுரம் பகுதியில் இருந்து தண்ணீர் வருவதாகவும், அதற்கு பைப் போட வேண்டுமென அதிகாரிகள் கூறியிருப்பதாக தெரிவித்தார். மழைநீரை வெளியேற்ற பொதுப்பணித்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.

இந்நிலையில் பருவமழை தொடக்கத்திலேயே இந்திராகாந்தி சதுக்கத்தில் குளம்போல் மீண்டும் மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்படுத்திய நிலையில், அடுத்த புயல், கனமழை வருவதற்குள் இப்பிரச்னைக்கு தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். அதன்பேரில் பொதுப்பணித்துறையினர் இந்திராகாந்தி சதுக்கம் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள பெரிய வாய்க்கால்கள், மழைநீர் வடிந்து செல்லும் பகுதிகளை ஆய்வு செய்தனர்.

மழைநீர் வடியாமல் நின்ற பகுதிகளில் பொக்லைன் இயந்திரம் மூலமாக குப்பைகளை தூர்வாரி தண்ணீர் விரைந்து வெளியேறும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதேபோல் விழுப்புரம் சாலை, கடலூர் ரோடு, உழவர்கரை, வெங்கட்டா நகர், காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் வாய்க்கால்களை பொக்லைன் இயந்திரம் உதவியுடன் தூர்வாரும் பணிகளில் பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags : Chief Minister ,Puducherry ,Public Works Department ,Rangasamy ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...