×

பவுர்ணமி கிரிவலம் செல்ல முயன்ற பக்தர்கள் தடுத்து நிறுத்தம் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு திருவண்ணாமலையில் தொடர்ந்து 10வது மாதமாக தடை

திருவண்ணாமலை, டிச.30: திருவண்ணாமலையில் தொடர்ந்து 10வது மாதமாக பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி நேற்று கிரிவலம் செல்ல முயன்ற பக்தர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். திருவண்ணாமலையில், மாதந்தோறும் நடைபெறும் பவுர்ணமி கிரிவலம் பிரசித்தி பெற்றது. தீபமலை அமைந்துள்ள 14 கிமீ கிரிவலப்பாதையை லட்சக்கணக்கான பக்தர்கள் வலம் வந்து வழிபடுகின்றனர். அதற்காக, தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் மாதந்தோறும் பக்தர்கள் வருவது வழக்கம்.

அதையொட்டி சிறப்பு பஸ்கள், சிறப்பு ரயில்களும் இயக்கப்படும். அதனால், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில், திருவண்ணாமலை நகரம் விழாக்கோலமாக காட்சிதரும். ஆனால், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, கடந்த மார்ச் 24ம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், கிரிவலம் செல்ல தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, தொடர்ந்து 10வது மாதமாக, பவுர்ணமி கிரிவலத்துக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மார்கழி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று காலை 8.01 மணிக்கு தொடங்கி, இன்று காலை 8.57 மணிக்கு நிறைவடைகிறது. இதையொட்டி, நேற்று பக்தர்கள் தனித்தனியாகவும், குடும்பமாகவும் கிரிவலம் செல்ல முயன்றனர்.

ஆனால், கிரிவலப்பாதையின் பல்வேறு இடங்களில் தடுப்பு வேலிகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், கிரிவலம் செல்ல முயன்ற பக்தர்களை தடுத்து திருப்பி அனுப்பினர். மேலும், கிரிவலப்பாதை வழியாக கார், வேன், ஆட்டோ போன்ற வாகனங்களையும் அனுமதிக்கவில்ைல.கிரிவலப்பாதை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. எஸ்பி அரவிந்த் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் நேற்று பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். கொரோனா பரவல் விழிப்புணர்வு நடைமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

Tags : Devotees ,area ,Pavurnami Kiriwalam ,Thiruvannamalai ,
× RELATED திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி...