×

தீபாவளி பண்டிகைக்காக விற்கப்பட்ட கார்பைடு துப்பாக்கியால் கண்பார்வை இழந்த 14 குழந்தைகள்: 122 சிறுவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை, 6 பேர் கைது

போபால்: மத்தியப்பிரதேசத்தில் கால்சியம் கார்பைடு துப்பாக்கிகளை பயன்படுத்தியதால் 14 சிறுவர்கள் தங்களது கண்பார்வையை இழந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மத்தியப்பிரதேசத்தில் தீபாவளியன்று விற்பனை செய்யப்பட்ட ஆபத்தான கார்பைடு துப்பாக்கிகளால் 100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிகளை பயன்படுத்தியதால் ஏற்பட்ட காயங்கள் காரணமாக மாநிலம் முழுவதும் 3 நாட்களில் சுமார் 122 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றாலும் காயமடைந்தவர்களில் 14 சிறுவர்கள் கண்பார்வையை இழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது திஷா மாவட்டமாகும். கார்பைடு துப்பாக்கிகளை விற்பனை செய்வதற்கு தடை விதித்து கடந்த 18ம் தேதி அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும் உள்ளூர் சந்தைகளில் இந்த துப்பாக்கிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சுமார் ரூ.150 முதல் ரூ.200 வரை பொம்மைகள் போன்று இருக்கும் இந்த துப்பாக்கிகள் குண்டுகளை போன்று வெடிக்கின்றன.

போபால், இந்தூர், ஜபல்பூர் மற்றும் குவாலியர் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகள் முழுவதும் இந்த துப்பாக்கிகளால் காயமடைந்து கண் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்ட சிறுவர்கள் கண் சிகிச்சை வார்டுகள் நிரம்பி உள்ளன. போபால் எய்ம்சில் அனுமதிக்கப்பட்ட 12 குழந்தைகளின் கண் பார்வை பறிபோய் உள்ளது. ஹமீடியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு குழந்தைகள் கண் பார்வையை இழந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெற்றோர் கூறுகையில்,‘‘இந்த துப்பாக்கிகளை தயாரித்து விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குழந்தைகளின் மருத்துவச் செலவுகளை ஈடுகட்ட இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதனிடையே விதிஷாவில் கார்பைடு துப்பாக்கிகள் விற்பனை செய்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பெற்றோர்கள் இந்த கார்பைடு துப்பாக்கியை குழந்தைகளுக்கு வாங்கி தர வேண்டாம் என்று மருத்துவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

Tags : Diwali festival ,Bhopal ,Madhya Pradesh ,Diwali ,
× RELATED பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின்