- சாமத்துவாபுரம்
- பெரியகொளப்பாடி பஞ்சாயத்து
- திருவண்ணாமலை
- பெரியார் சமத்துவபுரம்
- கலெக்டர்
- தர்பகராஜ்
- தமிழ்நாடு அரசு
திருவண்ணாமலை, அக். 24: பெரிய கோளாப்பாடி ஊராட்சியில் புதியதாக கட்டப்படும் பெரியார் சமத்துவபுரம் வீடுகள் பெற தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்க வரும் 31ம் தேதி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருவண்ணாமலை கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்திருப்பதாவது: தமிழக அரசு கடந்த 2023-24ம் ஆண்டு பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டத்தின் கீழ் செங்கம் ஒன்றியம் பெரிய கோளாப்பாடி ஊராட்சியில் 100 சமத்துவபுரம் குடியிருப்புகளை ரூ.6.28 கோடியில் கட்ட அனுமதிக்கப்பட்டு, அப்பணிகள் நடந்து வருகிறது. பெரியகோளாப்பாடி ஊராட்சியில் புதியதாக கட்டப்படும் சமத்துவபுரத்தில் வீடுகள் ஒதுக்கீட்டில் பயன்பெறுவதற்கு தகுதியுள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.
அதன்படி, எஸ்சி-40, பிசி-25, எம்பிசி -25 மற்றும் இதர வகுப்பினர்-10 என்ற அடிப்படையில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும். அதில் பயன்பெற விரும்புவோர் பெரியகோளாப்பாடி, சின்னகோளாப்பாடி, அஸ்வநாகசுரணை, கண்ணக்குருக்கை, பீமானந்தல், பாலியப்பட்டு, பாச்சல், செ.அகரம், பெரும்பாக்கம் மற்றும் விண்ணவனூர் ஆகிய ஊராட்சிகளில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், பெண்களை குடும்பத்தலைவராக கொண்ட குடும்பங்கள், முன்னாள் ராணுவத்தினர், துணை ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றோர், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள், மூன்றாம் பாலினத்தவர், எச்ஐவி, எய்ட்ஸ், காசநோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள், மன நலம் குன்றிய நபர்களைக் கொண்ட குடும்பங்கள், வெள்ளம், தீ போன்ற இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்டோர், பிஐபி தகவலின் அடிப்படையில் நலிவுற்ற அல்லது பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வீடுகள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படும்.
நலிவுற்றோரைக் கொண்ட இடமற்ற குடும்பங்கள், மண்சுவருடன் கூடிய ஓலை அல்லது ஓட்டு வீடு, செங்கல் சுவருடன் கூடிய ஓலை அல்லது ஓட்டு வீடுகளில் வசிக்கும் நலிவுற்றோரைக் கொண்ட குடும்பங்கள், இடமற்ற குடும்பங்கள், மண்சுவருடன் கூடிய ஓலை வீடு, செங்கல் சுவருடன் கூடிய ஓலை வீடுகளில் வசிக்கும் குடும்பங்கள் என்ற முன்னுரிமை வரிசைப்படி பயனாளிகள் தேர்வு நடைபெறும். மேலும், விண்ணப்பதாரர் ஆர்சிசி தளம் அமைக்கப்பட்ட வீடுகளில் வசிக்கும் நபராக இருக்க கூடாது. மத்திய மற்றும் மாநில அரசின் வீடு வழங்கும் திட்டத்தின் ஏற்கனவே பயன்பெற்ற நபரை கொண்ட குடும்பமாகவும் இருக்க கூடாது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் தகுதியுடைய நபர்கள், உரிய ஆவணங்களுடன் செங்கம் பிடிஓ அலுவலகத்தில் வரும் 31ம் தேதிக்குள் அளிக்க வேண்டும். விண்ணப்பங்களின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் கள ஆய்வு நடத்தி, பயனாளிகள் தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
