- துவாக்குடி அரசு கலைக் கல்லூரி
- திருச்சி
- துவாக்குடி அரசு கலைக் கல்லூரியின் வணிகவியல் துறைத் தலைவர்
- Thiruverumpur
- திருவெறும்பூர்,
- திருச்சி மாவட்டம்
- துவாக்குடி அரசு…
திருவெறும்பூர், அக்.23: திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அரசு கலைக்கல்லூரி வணிகவியல் துறை தலைவர் அலுவலகம் மற்றும் ஆய்வகத்தின் பூட்டை உடைத்து ஆவணங்களை எரித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே துவாக்குடி அரசு கலைக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த 17ம் தேதி கல்லூரி முடிந்து கல்லூரியை பூட்டி விட்டு சென்ற நிலையில், நேற்று காலை 10:30 மணியளவில் கல்லூரியில் சுத்தம் செய்யும் வேலை பார்க்கும் பவித்ரா என்ற பெண் கல்லூரி வணிகவியல் துறை தலைவர் அலுவலகம் மற்றும் கணினி ஆய்வகத்துக்குள் சென்றார். அப்போது, அலுவலகம் மற்றும் ஆய்வக அறையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்ததோடு, உள்ளே சென்று பார்த்தார். அப்போது, புகை மண்டலமாக இருந்தது. இதுகுறித்து பவித்ரா உடனே கல்லூரி முதல்வர் சத்யாவிற்கு தகவல் கொடுத்தார். சத்யா துவாக்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.தொடர்ந்து வணிகவியல் துறை தலைவர் செல்வேந்திரனுக்கும், துறை பேராசிரியர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபொழுது, வணிகவியல் தலைவர் மேஜையில் இருந்த அவரது தனிப்பட்ட ஆவணங்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் ஆவணங்கள் எரித்து தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆய்வகத்தில் இருந்த ஆவணங்களும் எரிந்து கிடந்தது. இந்த இரண்டு அறைகள் முழுவதும் புகை மூட்டமாக இருந்துள்ளது. மேலும் அங்கிருந்த இன்வெர்ட்டர் பேட்டரியை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.தகவல் அறிந்த துவாக்குடி போலீசார், திருவெறும்பூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் திருச்சி கைரேகை பிரிவு நிபுணர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் தீயணைப்பு துறையினர் அறைகளில் புகைந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து குற்றவாளிகளின் தடயங்களை பதிவு செய்தனர்.
இது சம்பந்தமாக கல்லூரி கல்வி இயக்குனர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இதுகுறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து ஆவணங்களுக்கு தீவைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
