×

வெளிநாடுகளில் இருந்து ஈரோடு வந்த மேலும் 28 பேர் தனிமையில் கண்காணிப்பு

ஈரோடு, டிச. 30:  அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் அதன் சுற்றுப்புற நாடுகளில் இருந்து வந்த 28 பேரின் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் உருமாற்றத்துடன், அதிக வீரியம் கொண்ட வைரசாக வேகமாக பரவி வருகிறது. இதனால், இங்கிலாந்துடனான விமான, கப்பல் போக்குவரத்து சேவையை பல நாடுகள் நிறுத்திக்கொண்டது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் அதன் சுற்றுப்புற நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் வந்தவர்களை சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதில், ஈரோடு மாவட்டத்திற்கு கடந்த 15ம் தேதிக்கு முன்பு இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வந்த 22 பேர் பெயர் பட்டியலை பெற்று சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தினர். இதில், 22 பேரில் 19 பேர் மட்டுமே ஈரோடு மாவட்டத்தில் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்கள் 19 பேருக்கும் கொரோனா இல்லை என்பது பரிசோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மத்திய சுகாதார அமைச்சகம் அளித்த பட்டியலில், இங்கிலாந்து மற்றும் அதன் சுற்றுப்புற நாடுகளில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு வந்ததாக கூடுதலாக 28 பேரின் பட்டியலை வழங்கியது. இதையடுத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் 28 பேரின் அடையாளம் கண்டுபிடித்து, அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தி, கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள் கூறியதாவது:  மத்திய சுகாதார அமைச்சகம் அளித்த பட்டியிலின்படி இங்கிலாந்து, அமெரிக்கா உட்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து ஈரோட்டுக்கு வந்தவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டன. முதற்கட்டமாக அளித்த பட்டியலில் இருந்த 22 பேரில், 19 பேர் மட்டுமே ஈரோடு மாவட்டத்திற்கு வந்துள்ளனர்.

அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கொரோனா தொற்று இல்லை என உறுதியானது. அதன்பின்னர், 2ம் கட்டமாக ஈரோடு மாவட்டத்திற்கு வந்ததாக 28 பேர் கொண்ட பட்டியலை சுகாதார அமைச்சகம் வழங்கியது. அதன்பேரில், ஈரோடு வந்த வெளிநாடுகளை சேர்ந்த 28 பேரின் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் 28 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் 14 நாட்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு தேவையான உதவிகளை அந்தந்த பகுதி சுகாதாரத்துறையினர் செய்து வருகின்றனர்.

மேலும், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அல்லாது பிற நாடுகளில் இருந்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஈரோடு வந்தவர்கள் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Erode ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...