×

மழைக்காலத்தில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய மின்பாதுகாப்பு நடைமுறைகள்

வேதாரணயம், அக்.23: மழைக்காலங்களில் பொதுமக்கள் மின் பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்குமாறு உதவி செயற்பொறியாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டம்,வேதாரண்யம் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் அசோக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
மழை காலங்களில் ஈரமான கைகளால் மின்சுவிட்சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம். வீட்டில் மின்சுவிட்சுகளை ‘ஆன்’ செய்யும்போது கவனத்துடன் இயக்க வேண்டும். வீட்டின் உள்புறசுவர் ஈரமாக இருந்தால் மின்சார சுவிட்சுகள் எதையும் இயக்கக்கூடாது. வீடுகள் மற்றும் கட்டடங்களில் உள்ள ஈரப்பதமான சுவர்களில் கை வைப்பதை தவிர்க்க வேண்டும். நீரில் நனைந்த அல்லது ஈரப்பதமான பேன், லைட் உட்பட எதையும் மின்சாரம் வந்தவுடன் இயக்க வேண்டாம். மின்சார மீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் உபேயாகிக்கக்கூடாது. வீட்டில் மின்சாரம் இல்லையென்றால் அருகில் இருந்து தாங்களாகவே ஒயர் மூலம் மின்சாரம் எடுக்கவேண்டாம்.

மின்கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள், மின்சார கேபிள்கள், மின்சார கம்பங்கள், பில்லர் பாக்ஸ் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் செல்வது தவிர்க்கப்பட வேண்டும். சாலைகளிலும், தெருக்களிலும் மின்கம்பங்கள் மற்றும் மின்சாதனங்களுக்கு அருகே தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் நடப்பேதா, ஓடுவேதா, விளையாடுவதோ மற்றும் வாகனத்தில் செல்வேதா தவிர்க்கப்பட வேண்டும். தாழ்வாக தொங்கிக் கொண்டிருக்கும் மின்சார ஒயர்கள் அருகில் செல்வதையும், தொடுவதையும் தவிர்க்கவேண்டும்.

மின்கம்பத்திலோ அல்லது அவற்றை தாங்கும் ஸ்டே கம்பிகளிலோ கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம். மின்சேவைகள், மின்கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலோ, மின்கம்பங்கள் உடைந்திருந்தாலோ, சாய்ந்திருந்தாலோ மின்சார அலுவலகத்திற்கு உடன் தகவல் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags : Vedaranyam ,Executive ,Ashok Kumar ,Executive Engineer ,Vedaranyam Electricity Board ,Nagapattinam District ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...